

‘‘எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தி சார்க் அமைப்பில் இடம்பெற்றுள்ள 8 நாடுகளும் தீர்வு காண வேண்டும்’’ என்று இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே வலியுறுத்தினார்.
இலங்கை பிரதமர் ரனில் இந்திய பயணம் மேற்கொண்டுள்ளார். பிரதமர் மோடியை சந்தித்த ரனில் பிராந்திய பாதுகாப்பு, இரு நாட்டு உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து ரனில் விக்கிரமசிங்கே கூறியதாவது:
இந்தியா – பாகிஸ்தான் இடையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள போர் ஒரு தீர்வாகாது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து சார்க் அமைப்பில் இடம்பெற்றுள்ள 8 நாடுகளும் விரிவாக ஆலோசனை நடத்தி தீர்வு காண வேண்டும். சார்க் மாநாடு ஒத்திவைக்கப்பட்டதற்கு காரணம் என்ன? என்ன நடந்தது என்பது பற்றியெல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சார்க் அமைப்பின் முன்பு இப்போது 2 முக்கிய விஷயங்கள் மட்டும்தான் உள்ளன. ஒன்று எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எப்படி தடுப்பது என்பது. மற்றொன்று எந்தெந்த விஷயங்களில் 8 நாடுகளும் சேர்ந்து பணியாற்றுவது என்பது. இந்த 2 விஷயங்கள் குறித்தும் சார்க் நாடுகள் கவனம் செலுத்த வேண்டும். அதை நாம் செய்யாவிட்டால், சார்க் அமைப்பு என்பது கேள்விக் குறிதான். ஏனெனில், இந்தியா – பாகிஸ்தான் இடையில் பதற்றம் ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக சார்க் அமைப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு ரனில் விக்கிரமசிங்கே கூறினார். ‘‘உரியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் ஏற்படுமா?’’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதில் பதில் அளித்த ரனில் விக்கிரமசிங்கே, ‘‘போரினால் எந்த நாட்டுக்கும் தீர்வு ஏற்படாது. அதேசமயம் தற்போதுள்ள பதற்றத்தை தணிக்க பிரதமர் மோடி பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்’’ என்றார்.