

முக்தார் அன்சாரியின் கட்சி கவுமி ஏக்தா தளத்தை சமாஜ்வாதியுடன் இணைக்கப்போவதாக அதன் உத்தரப் பிரதேச மாநிலத் தலைவர் ஷிவ்பால்சிங் யாதவ் அறிவித்துள்ளார்.
இதன்மூலம், உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ்சிங் யாதவிற்கு தனது சித்தப்பாவால் மீண்டும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் கிரிமினல் பட்டியலில் இடம்பெற்று எம்எல்ஏவாக இருப்பவர் கவுமி ஏக்தா தளம் கட்சியில் தலைவர் முக்தார் அன்சாரி. தன் மீதான பல்வேறு கிரிமினல் வழக்குகளின் காரணமாக அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அன்சாரி உட்பட இரு எம்.எல்.ஏ.க்கள் கொண்ட இக்கட்சிக்கு உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப்பகுதி முஸ்லிம்கள் இடையே சிறிது செல்வாக்கு இருப்பதாகக் கருதப்படுகிறது.
இதனால், அவரது கட்சியை சமாஜ்வாதியுடன் கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி ஷிவ்பால்சிங் இணைத்தார். இதை வன்மையாகக் கண்டித்த முதல் அமைச்சர் அகிலேஷ், அடுத்த சில நாட்களில் இந்த இணைப்பை ரத்து செய்து அறிவித்தார். இந்த இரு செய்திகளும் அப்போது ‘தி இந்து’வின் இணையதளத்தில் விரிவாக வெளியானது.
இதை தொடர்ந்து மகன் அகிலேஷ் மற்றும் சித்தப்பாவான ஷிவ்பாலுக்கும் இடையே உருவான கருத்து மோதல் பெரிதாக வெடித்தது. இதில் தலையிட்ட சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ், தலையிட்டு பிரச்சனையை தீர்த்து வைக்க முயன்றார். உ.பி மாநில தலைவர் பதவியில் இருந்து தன் மகன் அகிலேஷை நீக்கி சகோதார் ஷிவ்பாலை நியமித்தார். இத்துடன் தாம் ராஜினாமா செய்த உ.பி அமைச்சர் பதவியிலும் ஷிவ்பால் மீண்டும் அமர்த்தப்பட்டார். இதன்பிறகும் மோதல் தொடரும் வகையில் ஷிவ்பால், சமாஜ்வாதியுடன் கவுமி ஏக்தா தளம் இணைப்பை நேற்று அறிவித்துள்ளார். இதனால், அகிலேஷுக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஷிவ்பால் கூறுகையில், ‘நம் கட்சித் தலைவர் முலாயம்ஜியின் அனுமதி பெற்று இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். இவரது முடிவு குறித்து அகிலேஷுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்தமுறை சில தவறான புரிதல் காரணமாக இணைப்பு அறிவிப்பு ரத்தானது. தற்போது எந்த பிரச்சனையும் கிடையாது.’ எனத் தெரிவித்தார்.
உபியின் கிரிமினல் குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்ற அன்சாரி, முதன் முறையாக மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு மாவ் தொகுதியின் எம்.எல்.ஏவானார். பிறகு இருமுறை சுயேச்சையாக உ.பி சட்டப்பேரவை தேர்தலில் அதே தொகுதியின் எம்எல்ஏவாக வென்றார். கவுமி ஏக்தா தளம் சார்பில் 2012 சட்டப்பேரவை தேர்தலில் உபியின் 43 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்திய அன்சாரிக்கு இரண்டு தொகுதிகளில் வெற்றி கிடைத்தது.
இவர் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக இருந்த முக்தார் அகமது அன்சாரியின் பேரன் ஆவார். இவரது கட்சியால் சமாஜ்வாதிக்கு அடுத்த வருட சட்டப்பேரவை தேர்தலில் வாரணாசி, மாவ் மற்றும் காஜிபூர் பகுதிகளின் முஸ்லீம் வாக்குகள் கிடைக்கும் என்ற எதிர்ப்பு உள்ளது.
இதற்கிடையே, ஷிவ்பால் அறிவித்த உ.பி மாநில சமாஜ்வாதியின் தேசிய நிர்வாக உறுப்பினர்கள் 81–ல் ஒருவர் கூட அகிலேஷ் ஆதரவாளர்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.