

பாண்டிக்காடு: கேரள மாநிலத்தில் குண்டும் குழியுமான சாலையை சீர்படுத்த வேண்டி நூதன வழியில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார் ஒரு நபர். அவரது போராட்டம் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. அவர் அப்படி என்ன செய்தார்?
நம் ஊரில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீர்படுத்த வேண்டி தனிநபர்கள், அமைப்புகள் போன்ற போராட்டம் மேற்கொள்வது வழக்கம். மோசமான சாலையில் தேங்கியுள்ள நீரில் நாற்று நடுவது என இந்த வகை போராட்டங்களுக்கு என ஒரு வழக்கமான டெம்பிளேட் இருக்கும். ஆனால் அதை தகர்த்துள்ளார் கேரளாவை சேர்ந்த ஹம்ச போர்லி (Hamsa Porley).
இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவான ‘ஜோக்கர்’ படத்தில் வரும் மன்னர் மன்னன் கதாபாத்திரம் போலவே இவரது போராட்ட செயல்பாடு உள்ளது. அந்தப் படத்தில் தனித்துவமான வழிகளில் போராட்டத்தை மேற்கொள்வார் மன்னர். அது போலவே உள்ளது ஹம்ச போர்லியின் போராட்டமும்.
இவர் அந்த மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டத்தின் ஒடம்பட்டாவை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசமான சாலையை சீர்படுத்த வேண்டி சாலையில் தேங்கியிருந்த சேரும் சகதியுமான நீரில் குளித்துள்ளார். அதோடு ஒற்றைக் காலில் நின்றபடி யோகாசனமும் செய்துள்ளார். தனது போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் மஞ்சேரி சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினர் யு.ஏ.லத்தீஃபின் காரை மறுத்துள்ளார்.
அப்போது யு.ஏ.லத்தீஃப் சாலை சீரமைப்பு பணிகளுக்கான வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக ஹம்ச போர்லியிடம் தெரிவித்துள்ளார். இந்த நூதன போராட்டம் மேற்கொள்ள ஹம்ச போர்லியின் நண்பர்கள் உதவியுள்ளனர். அந்தப் பகுதியில் சாலையை சீர்படுத்த வேண்டி பலமுறை போராட்டத்தை மக்கள் முன்னெடுத்துள்ளனர். இருந்தும் அரசு நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இந்த போராட்டத்தைப் அவர் மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.