

கிழக்கு மிட்னாபூர்: மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பள்ளிகளில் பகவத் கீதை கற்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார் அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி. இதனை திங்கள் அன்று கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் நடைபெற்ற ரத்த தான முகாமில் அவர் தெரிவித்திருந்தார்.
மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பகவத் கீதை புத்தக பிரதி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, பள்ளிகளில் பகவத் கீதையை பள்ளிகளில் போதிக்கும் திட்டத்தை குஜராத் மாநில அரசு அறிவித்திருந்தது. இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றையும் அம்மாநில அரசு அறிவித்திருந்தது.
“கீதை ஒரு மதம் சார்ந்த நூல் மட்டுமல்ல. குஜராத்தில் பள்ளி பாடத்திட்டத்தில் கீதை சேர்க்கப்பட்டுள்ளது. வங்காளத்தில் மக்களின் ஆசியுடன் தேசியவாத அரசு ஆட்சிக்கு வந்தால், பள்ளிகளில் கீதையை போதிப்போம்” என தெரிவித்துள்ளார் சுவேந்து அதிகாரி.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் முக்கிய நபராக இயங்கி வந்தவர் சுவேந்து அதிகாரி. கடந்த 2020 டிசம்பர் வாக்கில் பாஜக-வில் இணைந்தார். 2021 மாநில சட்டப்பேரவை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜியை வீழ்த்தியவர் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.