Published : 09 Aug 2022 04:17 AM
Last Updated : 09 Aug 2022 04:17 AM

மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு: நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு பரிந்துரை

புதுடெல்லி: மின்சார சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம், 2 நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று காலை கூடியது. இதில் மக்களவையில் 2022-ம் ஆண்டுக்கான மின்சார சட்டத் திருத்த மசோதாவை மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் அறிமுகம் செய்தார்.

தகவல் தொடர்பு வரிசையில் மின்சாரத்தை தனியார் மயமாக்குவதை அனுமதிப்பது இந்த மசோதாவின் நோக்கமாகும். இந்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டால், தொலைபேசி இணைப்பு மற்றும் இணைய சேவைகளுக்கு ஒரு நிறுவனத்தை தேர்வு செய்வதுபோல் மின்சாரத்துக்கும் ஒரு நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யமுடியும். மின்சார சட்டத்தின் 14, 42, 62, 146, 152,166 உள்ளிட்ட பிரிவுகளில் திருத்தம் செய்ய இந்த மசோதா வகை செய்கிறது.

உறுப்பினர்கள் எதிர்ப்பு

இந்த மசோதாவுக்கு ஆர்எஸ்பி உறுப்பினர் பிரேமச்சந்திரன், காங்கிரஸ் உறுப்பினர்கள் மணிஷ் திவாரி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மார்க்சிஸ்ட் உறுப்பினர் எம்.ஏ.ஆரிப், திரிணமூல் உறுப்பினர் சவுகதா ராய், திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மசோதா, அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என அவர்கள் கூறினர்.

ஆர்எஸ்பி உறுப்பினர் பிரேமச்சந்திரன் கூறும்போது, “அரசியல் சட்டத்தின் ஒத்திசைவு பட்டியலில் மின்சாரம் உள்ளது. எனவே மசோதாவை அறிமுகம் செய்யும் முன் மாநில அரசுகளுடன் விரிவான ஆலோசனை செய்வது மத்திய அரசின் கடமையாகும்”என்றார்.

மணிஷ் திவாரி கூறும்போது, “ஒரே பகுதியில் மின்சாரம் வழங்க பல தனியார் நிறுவனங்களை இந்த மசோதா அனுமதிக்கிறது. இதனால் லாபம் தனியாருக்கும் இழப்பு அரசுகளுக்கும் ஏற்படும். மின்சார விநியோகத்தில் மத்திய அரசின் பங்கை இந்த மசோதா குறைக்க முயற்சிக்கிறது” என்றார்.

“டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு எதிராக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என உறுப்பினர்கள் சவுகதா ராய், எம்.ஏ.ஆரிப் ஆகியோர் குற்றம்சாட்டினர்.

விவசாயிகள், ஏழைகள் பாதிக்கப்படுவர்

திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு கூறும்போது, “தமிழக அரசு கடந்த பல ஆண்டுகளாகவிவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குகிறது. இலவச மின்சாரம் பெறும் ஏழை விவசாயிகளை இந்தச் சட்டத் திருத்தம் பாதிக்கும்” என்றார்.

இதற்கு மத்திய மின்சாரத் துறை அமைச்சர் சிங் கூறும்போது, “இந்த மசோதா குறித்து எதிர்க்கட்சிகள் தவறான பிரச்சாரம் செய்கின்றன. விவசாயிகள் தொடர்ந்து இலவச மின்சாரம் பெற முடியும். மானியம் வழங்குவதை இந்த மசோதா தடுக்கவில்லை. மாநிலங்கள் மற்றும் தொடர்புடைய பல்வேறு தரப்பினருடன் கலந்து ஆலோசித்த பிறகே இந்த மசோதாவை தாக்கல் செய்தோம். இந்த மசோதா மக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஆதரவானது” என்றார்.

இதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கவலைகள் தொடர்பாக விரிவான ஆலோசனைக்காக இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்புகிறேன் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

டெல்லி, பஞ்சாப் முதல்வர்கள் எதிர்ப்பு

நாடாளுமன்றத்தில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டவுடன், இந்த மசோதா ஆபத்தானது என டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறினார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “மின்சார சட்டத்திருத்த மசோதா மக்களவையில் கொண்டுவரப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது. இதன் மூலம் நாட்டின் மின்சாரப் பிரச்சினை மேம்படுவதற்கு பதிலாக பிரச்சினை மேலும் தீவிரம் அடையும். மக்களின் துன்பம் அதிகரிக்கும். ஒருசில நிறுவனங்கள் மட்டுமே பலன் அடையும். இதை அவசர அவசரமாக கொண்டுவர வேண்டாம் என மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தனது ஒரு பதிவில், மாநிலங்களின் உரிமைகள் மீது மற்றொரு தாக்குதல். மாநிலங்களை கைப்பாவையாக மத்திய அரசு கருதக் கூடாது.எங்களின் உரிமைக்காக சாலை முதல் நாடாளுமன்றம் வரை போராடுவோம்” என்றார்.

அதேநேரம், மத்திய மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தனது ட்விட்டர் பதிவில், “இந்த மசோதா மக்களுக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் நன்மை தரக்கூடியது. மானியம்தொடர்பான பிரிவுகளில் எந்த மாற்றமும் இருக்காது. எந்தவகை நுகர்வோருக்கும் மாநில அரசுகள் எந்த அளவும் மானியம் தரலாம். ஏன் இலவசமாக கூட தரலாம். இதில் விவசாயிகளை பாதிக்கும் எந்தப் பிரிவும் இல்லை.பொதுத்துறை, தனியார் என அனைத்து விநியோக நிறுவனங்களையும் வலுவான மாநில மின்சார ஆணையங்கள் ஒழுங்குபடுத்த முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x