குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு பிரியாவிடை: மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு பிரியாவிடை: மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்

Published on

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் பதவிக் காலம் நாளையுடன் நிறைவு பெறுகிறது. அவருக்கு மாநிலங்களவையில் நேற்று பிரிவு உபசார விழா நடைபெற்றது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது.

நாட்டின் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், மக்களவை சபாநாயகர், பிரதமர் என அனைவருமே சுதந்திர இந்தியாவில் பிறந்தவர்கள். மிகவும் எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர்கள்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இளைஞர்களின் நலனில், முன்னேற்றத்தில் அதிக அக்கறை செலுத்தி வருகிறார். கட்சி தொண்டராக, எம்.எல்.ஏ.வாக, எம்.பி.யாக, பாஜக தலைவராக, மத்திய அமைச்சராக, குடியரசு துணைத் தலைவராக அவர் திறம்பட செயல்பட்டார். அவரோடு பணியாற்றும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அவரது சித்தாந்தம், சுறுசுறுப்பு, புத்திசாலித்தனம், கடின உழைப்பு, புதுமை முயற்சிகளை பார்த்து வியந்துள்ளேன்.

குடியரசு துணைத் தலைவரின் அடுக்குமொழி பேச்சுகள் மிகவும் பிரபலமானவை. ஒவ்வொரு வார்த்தையும் அவரது அறிவாற் றலை, நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும். அவரது ஒற்றை வார்த்தை சிரிக்க வைக்கும், சிந்திக்க வைக்கும். ஒவ்வொரு வார்த்தையும் வெற்றியின் வார்த்தை. அவரது பதவிக் காலத்தில் மாநிலங்களவையில் ஒவ்வொரு இந்திய மொழிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மாநிலங்களவையின் பணித் திறன் 70 சதவீதம் அதிகரித்திருக்கிறது. சுமார் 177 மசோதாக்கள் விவா திக்கப்பட்டன.

மாநிலங்களவையில் கட்சி ரீதியாக பல கருத்து வேறுபாடு கள் நிலவுகின்றன. எனினும் உங் களுக்கு பிரியாவிடை அளிப்பதில் அனைத்து எம்.பி.க்களும் ஒன்று சேர்ந்துள்ளனர். இதுதான் நமது நாட்டு ஜனநாயகத்தின் அழகு. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது, "நாம் இரு வேறு துருவங்களை சேர்ந்தவர்கள். உங்களது பதவிக் காலத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா, இதர மசோதாக்கள் மீது கருத்தொற்றுமையை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டீர்கள். அந்த பணியை மத்திய அரசு நிறைவு செய்யும் என எதிர்பார்க்கிறேன்" என்று தெரிவித்தார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 18-ம்தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், 4 நாட்களுக்கு முன்னதாகவே நேற்று இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.- பிடிஐ

தாயை நினைத்து கண்ணீர்

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் பேசும்போது, "குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் குடும்பத்தில் 8 மாட்டு வண்டிகள் இருந்தன. அவர் ஒரு வயது குழந்தையாக இருந்தபோது வீட்டில் இருந்த ஒரு காளை முரண்டு பிடித்து, அவரது தாயாரை முட்டியது. இதில் அவரது தாயார் உயிழந்தார். பச்சிளம் குழந்தையாக தாயை இழந்து வேதனையில் தவித்த அவர், இன்று பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். ஓய்வுக் காலத்தில் அவர் சுயசரிதை எழுத வேண்டும்" என்று தெரிவித்தார்.

அவர் அப்படி தெரிவித்ததும் தாயை நினைத்து அவையில் வெங்கய்ய நாயுடு கண்ணீர் விட்டார். பின்னர் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு பேசுகையில், ‘‘எனது பதவிக் காலத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு சமமாக வாய்ப்பளித்தேன். நாம் எதிரிகள் கிடையாது, நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற வேண்டும். இதுவே எனது விருப்பம். அவை எம்.பி.க்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’’ என்று கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in