

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்துவருவதால் தமிழகத்துக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. இதனால் கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி உள்ளிட்ட அணைகள் முழுக் கொள்ளளவை எட்டவில்லை.
இந்நிலையில் அரபிக் கடல் பகுதியில் சுழற்காற்று உருவாகியுள்ளதால் குடகு, மைசூரு, மண்டியா, ராம்நகர், சாம்ராஜ்நகர், பெங்களூரு, சித்ரதுர்கா, துமகூரு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் மடிகேரி,மைசூரு, மண்டியா, பெங்களூரு ஊரகம் ஆகிய மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மண்டியா மாவட்டத்தில் ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதே போல கபினி அணைக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேக்கேதாட்டு, கனகப்புரா, பிலிகுண்டுலு உள்ளிட்ட வனப்பகுதிகளில் கனமழை பெய்ததால் தமிழகத்துக்கு 3 ஆயிரம் கன அடி முதல் 4 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.