Last Updated : 08 Aug, 2022 10:32 PM

 

Published : 08 Aug 2022 10:32 PM
Last Updated : 08 Aug 2022 10:32 PM

பொது பல்கலை நுழைவுத் தேர்வை திரும்பப் பெறுக: மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தல்

தமிழச்சி தங்கபாண்டியன் | கோப்புப்படம்

புதுடெல்லி: பொது பல்கலைகழக நுழைவுத் தேர்வை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் திங்கள்கிழமை மக்களவையில் வலியுறுத்தினார்.

இதுகுறித்து தென்சென்னை தொகுதி மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் விதி எண் 377-ன் கீழ் பேசியதாவது. 2022-2023-ம் கல்வியாண்டுக்கான மத்திய அரசின் அறிவிப்பில், அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் உள்ள பல்கலைக்கழக மானியக்குழுவின் பல்வேறு படிப்புகளுக்கு, தேசிய தேர்வு முகமை நடத்தும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வின் மூலமே மாணவர்களை சேர்க்க முடியும் என்று தெரிவித்துள்ளது.

இது துரதிர்ஷ்டவசமானது. நீட் உள்ளிட்ட தேர்வுகள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிக்கல்வி முறைகளை ஓரங்கட்டுகிறது. நுழைவுத்தேர்வில் மதிப்பெண்களை மேம்படுத்துவதற்கு மாணவர்கள் பயிற்சி மையங்களையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது.

என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு நுழைவுத் தேர்வும் மற்ற பாடத்திட்டங்களில் உள்ள தகுதியான மாணவர்களுக்கு பாதகத்தையே ஏற்படுத்தும். அனைத்து மாணவர்களுக்கும் அது சமமான வாய்ப்பை வழங்காது.

பெரும்பாலான மாநிலங்களில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், மாநில பாடத்திட்டத்தில் படிப்பவர்களாகவே உள்ளனர். மேலும் அவர்கள் ஒதுக்கீட்டு பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் ஆவர்.

எனவே, அனைத்துப் படிப்புகளிலும் மாணவர் சேர்க்கைக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக முதல்வர், பிரதமருக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார்.

நானும் இந்தப் புதிய திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு தமிழச்சி தங்கபாண்டியன் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x