

புதுடெல்லி: சுபாஷ் சந்திரபோஸின் கொள்ளுப் பேத்தி ராஜ்ஸ்ரீ. இவர், வாரணாசி கியான்வாபி மசூதி வழியாக சிங்கரக்கவுரி அம்மனை தரிசிக்கும் நிகழ்ச்சிக்கு செல்ல முயன்ற போது ரயிலிலிருந்து கீழே இறக்கப்பட்டு அரசு விடுதி ஒன்றில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம், வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி வழியாக சிங்காரக்கவுரி அம்மனை தரிசிக்கும் நிகழ்ச்சிக்கு விஷ்வ இந்து சேனா எனும் இந்துத்துவா அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இதற்கு ராஜ்ஸ்ரீ மற்றும் திருநங்கைகள் மடத்தின் தலைமை துறவியான ஹேமாங்கி சகி ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். இதற்காக ராஜ்ஸ்ரீ சவுத்ரி ஞாயிற்றுக்கிழமை இரவு டெல்லியிலிருந்து வாரணாசிக்கு ரயிலில் புறப்பட்டார்.
கியாவாபி மசூதி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு கியான்வாபியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், தடையை மீறி இந்து அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வினை முன்கூட்டியே தடுக்கும் நடவடிக்கையில் உத்தரப் பிரதேச போலீஸார் இறங்கினர்.
இதனைத் தொடர்ந்து, அந்நிகழ்ச்சிக்கு சுபாஷ் சந்திரபோஸின் கொள்ளுப் பேத்தியான ராஜ்ஸ்ரீயும் வருவதாக அறிந்தனர். இதனைத் தொடர்ந்து அவர் வரும் ரயிலை அடையாளம் கண்டு அதை அலகாபாத் அருகில் நிறுத்தினர்.
ரயிலிலுக்குள் பெண் போலீஸாரை அனுப்பி ராஜ்ஸ்ரீயை அழைத்து வந்தனர். பிறகு அவரிடம் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக அலகாபாத்தின் அரசு விடுதியில் அவர் தங்க வைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
பிறகு அவர் அலகாபாத்தின் சிவில் லைன் பகுதியிலுள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டார். அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராஜ்ஸ்ரீயை சந்திக்க எவருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.
விஷ்வ இந்து சேனாவினர் கைது:
இந்நிலையில், வாரணாசியின் கங்கை கரைகளில் ஒன்றான அஸ்ஸி காட்டிலிருந்து விஷ்வ இந்து சேனாவின் தலைவர்கள் கியான்வாபி மசூதிக்கு கிளம்பினர். இவர்களில் தலைவர் அருண் பாதக் உள்ளிட்ட நால்வரை வாரணாசி போலீஸார் தடுத்து கைது செய்தனர்.
இவர்கள் மீது மதநல்லிணக்கத்தை குலைக்க முயன்றது உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து கியான்வாபி மசூதியை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.