Published : 31 Oct 2016 07:45 AM
Last Updated : 31 Oct 2016 07:45 AM

காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல்: 4 பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் அழிப்பு - எல்லைப் பகுதியில் பதற்றம்

காஷ்மீர் எல்லையில் 4 பாகிஸ்தான் ராணுவ முகாம்களை இந்திய ராணுவ வீரர்கள் அதிரடியாக தாக்கி அழித்தனர். இதில் பாகிஸ்தான் வீரர்கள் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய வீரரை கொன்று அவரது உடலை துண்டாக்கியதற்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். இதனால் எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக் கிழமை மச்சில் செக்டார் பகுதியில் சீக்கியர் ரெஜிமென்ட்டை சேர்ந்த மான் ஜீத் சிங் என்ற வீரரை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அத்துடன் அவரது தலையை துண்டித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திய ராணுவ அதிகாரிகள், தீவிரவாதிகளின் செயலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று உறுதியாக கூறினார்.

அதன்படி, வடக்கு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தின் கேரன் செக் டார் எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவத்தினர் கடந்த சனிக்கிழமை அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 4 பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், அதில் ஏராளமானோர் பலியாகி இருக்கலாம் என்றும் எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை என்றும் உதாம்பூரில் உள்ள வடக்கு பிராந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேரன் செக்டார் பகுதியில் ஒரே நேரத்தில் துப்பாக்கிச் சூடு, குண்டுவீச்சு, ராக்கெட் வீச்சு என பல்முனை தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் கடந்த சனிக்கிழமை முழுவதும் ஈடுபட்டுள்ளனர். இதில் 4 பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் அடியோடு அழிக்கப்பட்டுள்ளன.

சனிக்கிழமை முழுவதும் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் படையினருக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் 4 இந்திய வீரர்கள், 3 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், பொதுமக்களில் சிலர் இந்த சண்டையின் போது பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாக். தளபதி ஓய்வு

பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ரஷீல் ஷெரீப் அடுத்த மாதம் பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்னதாக இந்திய பகுதிகளில் கடும் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் படையினருக்கு உத்தரவிட்டதாகவும், அதன்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி எல்லைப் பகுதியில் பாகிஸ் தான் படையினர் இடைவிடாமல் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதாகவும், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய முயற்சி நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், துல்லிய தாக்கு தலுக்கு (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) பிறகு எல்லையில் இந்திய ராணு வத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதுடன், பாகிஸ்தான் படை யினருக்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். துல்லிய தாக்கு தலுக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இதுவரை 60-க்கும் மேற்பட்ட முறை பாகிஸ் தான் படையினர் எல்லையில் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதனால் காஷ்மீரில் பதற்றம் அதிகரித்துள்ளது.

கதுவா, சம்பா, ஜம்முவில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்

காஷ்மீரின் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் இருந்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சம்பா, கதுவா, ஜம்மு மாவட்ட சர்வதேச எல்லைப் பகுதிகளில் பீரங்கி குண்டுகள், வெடிகுண்டுகளை வீசினர். எல்லைப் பாதுகாப்புப் படை முகாம்களை குறிவைத்தும், பொதுமக்கள் வசிக்கும் இடங்களை குறிவைத்தும் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தினர்.

இதுகுறித்து ஜம்மு போர்முனை எல்லைப் பாதுகாப்புப் படை டிஐஜி தர்மேந்திரா பரீக் நேற்று கூறும்போது, ‘‘வெள்ளிக்கிழமை இரவு 9.15 மணி முதல் விடிய விடிய இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் இடைவிடாமல் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதற்கு எல்லைப் பாதுகாப்புப் படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர்’’ என்றார்.

அவர் மேலும் கூறும்போது, ‘‘ஹிராநகர், சம்பா பகுதியில் நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 6 மணி வரை பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தினர். அதன்பிறகு சர்வதேச எல்லைப் பகுதி உட்பட எல்லா பகுதிகளிலும் சனிக்கிழமை காலை 8.20 மணிக்கு துப்பாக்கிச் சூடு நடத்துவதை பாகிஸ்தான் படையினர் நிறுத்தினர். இந்திய தரப்பில் எந்த பாதிப்பும் இல்லை’’ என்றார்.

-பிடிஐ

பாக். வீரர்களுடன் தீபாவளி இனிப்பு பரிமாற்றம் இல்லை

காஷ்மீரில் பதற்றம் ஏற்பட்டுள்ள தால், அட்டாரி - வாகா எல்லை யில் பாகிஸ்தான் வீரர்களுக்கு தீபாவளி இனிப்புகள் வழங்கப் படவில்லை.

இந்திய - பாகிஸ்தான் எல்லை அட்டாரி - வாகாவில், பண்டிகை நாட்களில் இரு தரப்பு வீரர்களும் இனிப்புகள் பரிமாறிக் கொள்வது வழக்கம். இந்த முறை எல்லை யில் இருதரப்புக்கும் இடையில் தாக்குதல் நடப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது. எனவே, தீபாவளி நாளன்று அட்டாரி - வாகா எல்லையில் பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் இனிப்புகள் வழங்கவில்லை.

காஷ்மீர் எல்லைக் கட்டுப் பாட்டு கோட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ் தான் படையினர் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தீபாவளி இனிப்புகள் வழங்கப்படவில்லை என்று எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்த னர்.

-ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x