

பிஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம், பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்சித் தலைவரும் முதல்வருமான நிதிஷ் குமார் தலைமையில் நாளை அவசரமாக கட்சி எம்.பி.க்களுடன் அலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டத்தில் மிக முக்கிய முடிவுகள் எட்டப்படும் எனத் தெரிகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தை ஒட்டி இன்று மாலையோ அல்லது நாளை காலைக்குள்ளோ அனைத்து எம்.பி.க்களும் பாட்னா தலைமை அலுவலகத்துக்கு வருமாறு பணிக்கப்பட்டுள்ளது.
இந்த சர்ச்சை எழ முக்கியக் காரணம் ஆர்.சி.பி.குமார் சிங். பிஹாரில் ஐஏஎஸ் அதிகாரியான ஆர்.சி.பி.குமார் சிங், ஐக்கிய ஜனதா தள மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தார். கடந்த ஜூலை 31-ம் தேதியுடன் அவரது பதவி முடிந்தது. ஆனால், மறுவாய்ப்பு வழங்கவில்லை. இதன் காரணமாக மத்திய அரசில் உருக்கு துறை அமைச்சர் பதவியும் பறிபோனது. இந்நிலையில் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பைக் கூட துறந்தார். நிதிஷ் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம் ஒரு மூழ்கும் கப்பல் என்று கூறினார்.
இந்நிலையில் தான அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஐக்கிய ஜனதா தள மாநில செய்தித் தொடர்பாளர் நிகில் மண்டல் , எனக்கு இது பற்றி எதுவும் தெரியாது என்று மழுப்பலாக பதில் கூறியுள்ளார்.
இதற்கிடையில், பிஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியை உடைக்க பாஜக திட்டமிடுவதாக நிதிஷ் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் ஜக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவின் தேஜஸ்வினி யாதவுடன் கைகோத்து ஆட்சி அமைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.