

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்கள் பாஜக.வுடன் இணைந்து கடந்த ஜூன் 30-ம் தேதி புதிய அரசை அமைத்தனர். முதல்வராக சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே வும் துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னா விஸும் பதவியேற்றனர். ஆனால், ஒரு மாதத்துக்கு மேலாகியும் இன்னும் அமைச்சரவை விரிவாக் கம் செய்யப்படவில்லை.
அமைச்சரவை விரிவாக்கம் தாமதமாகி வருவதற்கு, தேசிய வாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் உள்ளிட்ட எதிர்க் கட்சித்தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று கூறும்போது, “அஜித் பவார் எதிர்க்கட்சித் தலை வராக இருப்பதால், அரசை குறை கூற வேண்டும் என்பதற்காக அவ்வாறு கூறுகிறார். கடந்த காலத்தில் அவர்கள் ஆட்சி அமைத்தபோது, 32 நாட்களுக்கு வெறும் 5 அமைச்சர்கள் மட்டுமே ஆட்சி நடத்தியதை அவர் மறந்து விட்டார். நீங்கள் கற்பனை செய்வதற்கு முன்பாகவே அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்” என்றார்.
இதனிடையே, வரும் 15-ம்தேதிக்குள் மகாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்என்றும் 15 பேர் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதில், முக்கியமான உள்துறை தேவேந்திர பட்னாவிஸ் வசமாகும் என்றும் கூறப்படுகிறது.