Published : 08 Aug 2022 06:51 AM
Last Updated : 08 Aug 2022 06:51 AM
ராய்ப்பூர்/போபால்: மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், உத்தர பிரதேச மாநிலம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை பெய்த போது மின்னல் தாக்கியதில் 16 பேர் உயிரிழந்தனர்.
நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளப் பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.விதிஷா மாவட்டம் அகசாத் கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை மழை பெய்த போது மரத்தடியில் நின்றிருந்த 4 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.
இதுபோல சத்னா மாவட்டம் போடி-பதவுரா மற்றும் ஜத்வாரா பகுதிகளில் மின்னல் தாக்கியதில் 4 பேர் உயிரிழந்ததுடன் 2 சிறுவர்கள் காயமடைந்தனர். காயமடைந்த சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.குணா மாவட்டம் போரா கிராமத்தைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவரும் மின்னல் தாக்கி உயிரிழந்தார். ஒட்டுமொத்தமாக ம.பி.யில் மட்டும் மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ஜாஞ்ச்கிர் சம்பா மாவட்டம் கியாரி கிராமத்தைச் சேர்ந்த 2 பேர், மதுவா, சோர்பத்தி, சியோனி கிராமங்களைச் சேர்ந்த தலா ஒருவர் என 5 பேர் நேற்று முன்தினம் மாலை மின்னல் தாக்கியதில் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர். மேலும் செமரியா கிராமத்தில் மின்னல் தாக்கி 23 ஆடுகள் உயிரிழந்தன.
உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டம் துல்ஹெடி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் வீட்டின் கூரை இடிந்து விழுந்து தாய், மகன் ஆகிய இருவர் உயிரிழந்ததாக போலீஸார் நேற்று தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களின் குடும்ப ங்களுக்கு சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ மனைகளில் உடனடியாக சிகிச்சை அளிக்கவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து தரும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
2 இண்டிகோ ஊழியர் காயம்
மகாராஷ்டிர மாநிலம் நாக் பூரில் நேற்று முன்தினம் கன மழை பெய்தது. அப்போது நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதை பொறியாளர்கள் சரி செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கியது. இதில் 2 ஊழியர்கள் காயமடைந்ததாகவும் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT