

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் ரூ. 5,700 கோடி செலவில் புதிய அணை கட்டப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்ட வரைவு அறிக்கை தயாராக இருப்ப தால் விரைவில் மத்திய அரசிடம் அனுமதிக் கோரப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மைசூருவில் நேற்று சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அண்டை மாநிலங்களுடன் நிலவும் காவிரி, கிருஷ்ணா, மகதாயி ஆகிய நதி நீர் விவகாரங்களை பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்க்க கர்நாடக அரசு விரும்புகிறது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களிடம் கர்நாடகா வலியுறுத்தி வருகிறது. கர்நாடகாவில் நிலவும் வறட்சியைப் போக்க, இந்த பிரச்சினைகளை தீர்ப்பதுதான் ஒரே வழி என்பதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும்.
காவிரி நீர்ப்பாசனப் பகுதிகளில் நிலவும் வறட்சி மற்றும் விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க மேகேதாட்டுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பே முடிவெடுக்கப்பட்டது. ரூ. 5,700 கோடி செலவில் கட்டப்படும் இந்த அணைக்கான விரிவான திட்ட வரைவு அறிக்கை தயாராக உள்ளது. அணை கட்டுமானத்துக்காக உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரும் பணியில் நிறைவடையும் நிலையில் உள்ளது.
மேகேதாட்டு அணை திட்டம் தொடர்பாக கர்நாடக அமைச்சரவை யில் விரிவாக விவாதிக்கப்படும். இதன்பிறகு முறையாக மத்திய அரசிடம் அனுமதி கோர முடிவு செய்துள்ளோம். இந்த அணையின் மூலம் 60 டிஎம்சி வரை உபரி நீரை தேக்கவும், மின்சாரம் தயாரிக்கவும் முடியும். இதற்காக மேகேதாட்டு பகுதியில் 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.
இந்த திட்டம் பெங்களூரு, சிக் மகளூர் உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீர்த் தேவைக்காகவும், மின்சார தேவைக்காகவும் நிறைவேற்றப் படுகிறது. மக்களின் நலன் சார்ந்த திட்டம் என்பதால் மத்திய வனத் துறை மற்றும் மத்திய நீர்வளத் துறையின் அனுமதி எளிதில் கிடைத்துவிடும். சட்டப்படி இந்த அணை கட்டப்படுவதால் தமிழக அரசின் எதிர்ப்பு தடையாக இருக் காது என நினைக்கிறேன்''என்றார்.