

வேட்பு மனு தாக்கல் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக நடவடிக்கை தேவையில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த வராகி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். “தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது தனது வேட்பு மனுவில் தனது திருமணம் தொடர்பான தகவல்களை நரேந்திர மோடி கூறியிருந்தார். ஆனால் இதற்கு முன்னர் நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவை தேர்தல்களின்போது தனது திருமணம் தொடர்பான தகவல்களை வேட்பு மனுவில் குறிப்பிடாமல் நரேந்திர மோடி மறைத்திருக்கிறார்.
அதேபோல் தற்போதைய வேட்பு மனுவிலும், மனைவியின் வருமானம், வருமான வரி தொடர்பான விவரங்கள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என குறிப்பிட்டுள்ளார். மனைவி பெயரில் உள்ள சொத்துகள் உள்பட அனைத்து விவரங்களையும் தெரிவிப்பது கட்டாயமாகும்.
ஆகவே, இந்த விவரங்களை யெல்லாம் வேட்பு மனுவில் குறிப்பிடாத நரேந்திர மோடிக்கு எதிராக குற்ற நடவடிக்கை உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்திட வேண்டும் என்று கோரி தேர்தல் ஆணையத்துக்கு கோரி்க்கை மனு அனுப்பினேன். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று வராகி தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் மனுதாரருக்கு பதிலளித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறிய தேர்தல் ஆணைய வழக்கறிஞர், அந்த கடிதத்தின் நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
“வேட்பு மனுவில் கேட்கப்படும் விவரங்கள் அனைத்துக்கும் பதிலளிப்பது கட்டாயம். விவரங்கள் கோரும் எந்தப் பகுதியையும் நிரப்பாமல் இருக்கக் கூடாது.
அதே நேரத்தில் இல்லை என்றோ, பொருத்தமற்றது என்றோ அல்லது தெரியாது என்றோ குறிப்பிடலாம்.
ஆகவே, நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரும் மனுதாரரின் கோரிக்கை ஏற்புடையதாக இல்லை” என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை மனு தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளித் துள்ளதால், இந்த வழக்கில் இதற்கு மேலும் விசாரணை தேவையில்லை என்று கூறி வழக்கினை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.