

கேரளாவில் அக்டோபர் 2-ம் தேதி ஐ.எஸ். தொடர்பு காரணமாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 6 பேர் கண்ணூரில் ஒன்று கூடி கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த ஆறுபேரும் இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பினால் ஈர்க்கப்பட்டவர்கள். கைது செய்யப்பட்ட பிறகு என்.ஐ.ஏ. விசாரணையில் கூறும்போது, சர்ச்சைக்குரிய இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக் மற்றும் இன்னொரு போதகர் எம்.எம்.அக்பர் ஆகியோரது போதனைகளை நெருக்கமாக பின்பற்றியதாகவும் ஆனால் அவர்களது பேச்சுக்கள் தங்கள் மீது தாக்கம் செலுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
நாயக் மற்றும் அக்பர் ஆகியோரது பேச்சுக்கள் அடங்கிய வீடியோ பதிவுகள் இந்த 6 பேரினது மொபைல்கள் மற்றும் லேப்டாப்களில் இருந்ததாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூத்த என்.ஐ.ஏ. அதிகாரி ஒருவர் கூறும்போடு, இந்த ஆறு பேரும் சலாஃபிக்கள் என்றார் அதாவது, இஸ்லாமியத்தின் ஒரு தூய்மைவாத வடிவத்தை பின்பற்றுபவர்கள் என்றார்.
முதலில் இந்த 6 பேரும் மலையாளத்தில் ‘muhajiroun2015. wordpress.com’ என்ற பிளாகை உருவாக்கியுள்ளனர், இது பாதுகாப்பு முகமைகள் அதிகாரிகளால் முடக்கப்பட்டது. “இதனை முடக்கியவுடன் இன்னொரு பிளாகை தொடங்கினர். இதில் ஐஎஸ் பற்றிய தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்” என்று மூத்த உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஐஎஸ்-ஆல் தாக்கம் பெற்ற இவர்கள் கண்ணூரில் ஒரு மலைப்பிரதேசத்தில் ஒன்று கூடி கேரளா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முக்கிய அரசியல் புள்ளிகள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என்று தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கத்தார் நாட்டில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த மன்சீத் என்கிற ஓமர் அல் ஹிந்தி (30) என்பவர் செப்டம்பரில் திடீரென இந்தியாவுக்கு வந்தார். இவர் இந்தியாவுக்கு வந்த பிறகுதான் இந்தக் கைதுகள் அரங்கேறியுள்ளது.
“மன்சீத் தனக்கு கத்தாரில் முறையான பணி எதுவும் இல்லை என்று எங்களிடம் தெரிவித்தார். கடந்த 6 ஆண்டுகளாக கத்தாருக்கு டூரிஸ்ட் விசாவில் அவர் சென்று வந்தார். நிரந்தர வேலையில்லாததால் இந்தியாவுக்கே திரும்ப முடிவெடுத்ததாக அவர் தெரிவித்தார்” என்று என்.ஐ.ஏ. அதிகாரி ஒருவர் கூறினார்.
இவரை கடந்த 4 மாதங்களாக பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். கைது செய்யப்பட்ட மற்றவர்கள் விவரம்: அபு பஷீர் (29) ஒரு மெக்கானிக். ஸ்வாலி மொகமது (26) சென்னையில் கிளப் மஹீந்திராவில் பணியாற்றி வந்தார். பி.சஃவான் (30), ஒரு நாளேட்டில் வடிவமைப்பாளராக இருப்பவர். ஜசிம் (25) ஒரு பொறியாளர், ரம்ஷத் (24) ஒரு அக்கவுண்டண்ட்.