

உலகின் மிகப் பழமையான விமானம் தாங்கி போர் கப்பலான ஐஎன்எஸ் விராட், இந்திய கடற்படை சேவையில் இருந்து விரைவில் விடைபெறுகிறது.
இந்திய கடற்படையில் 55 ஆண்டுகளாக சேவையாற்றிய ஐஎன்எஸ் விராட் விமானம் தாங்கி போர் கப்பல் இந்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெறவுள்ளது. இதற்காக கொச்சி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த இக்கப்பல் நேற்று மூன்று இழுவை கப்பல்கள் மூலம், மும்பைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. முன்னதாக இக்கப்பலுக்கு கொச்சியை சேர்ந்த கடற்படை அதிகாரிகளும், பொதுமக்களும் பிரியாவிடை அளித்தனர்.
கடற்படையில் இருந்து ஐஎன்எஸ் விராட் ஓய்வு பெற்றதும், கப்பலை ஆந்திர அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க அம்மாநிலத் திடம் ஒப்படைக்க கடற்படை சம்மதம் தெரிவித்துள்ளது. விசாகப் பட்டினம் துறைமுகத்தில் நிறுத்தி, இக்கப்பல் மூலம் சுற்றுலாவை மேம்படுத்த ஆந்திர அரசு திட்ட மிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
கொச்சியில் இருந்து தனது இறுதிப் பயணத்தைத் தொடங்கிய ஐஎன்எஸ் விராட் போர் கப்பலுக்கு மும்பையில் முறைப்படி பிரியாவிடை அளிக்கும் விழா நடத்தப்படும் என கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய கடற்படையில் மட்டுமின்றி, பிரிட்டன் கடற்படையிலும் 27 ஆண்டுகள் வரை ஐஎன்எஸ் விராட் சேவையாற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.