Published : 06 Aug 2022 04:11 AM
Last Updated : 06 Aug 2022 04:11 AM

இன்று குடியரசு துணை தலைவர் தேர்தல் - நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பாடுகள் மும்முரம்

புதுடெல்லி: புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (ஆகஸ்ட் 6) நடைபெற உள்ளது. இதில், ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜெகதீப் தன்கரும், எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வாவும் போட்டியிடுகின்றனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் கடந்த ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில், ஆளும் பாஜக சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர். இதில் திரவுபதி முர்மு வெற்றிபெற்று, நாட்டின் 2-வது பெண் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார். மேலும், பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, அடுத்த குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கர்,குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அதேபோல, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மார்கரெட் ஆல்வா நிறுத்தப்பட்டு உள்ளார்.

யார் வாக்களிக்கலாம்?

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களிக்க உரிமை கிடையாது. மாநிலங்களவையில் தேர்வு செய்யப்பட்ட 233 உறுப்பினர்களும், 12 நியமனஉறுப்பினர்களும், 543 மக்களவை உறுப்பினர்களும், 2 நியமன உறுப்பினர்களும் வாக்களிக்க உரிமை பெற்றவர்கள்.

இரு அவைகளையும் சேர்த்து மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 790. அவர்கள் அளிக்கும் வாக்கானது, பொதுமக்கள் அளிக்கும் வாக்காக கருதப்படுவதால், ஒத்த மதிப்புடையதாகவே இருக்கும்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குச்சீட்டில், போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கும். எந்தக் கட்சியின் சின்னமும் இடம்பெறாது.

அந்த வாக்குச்சீட்டில் இரு பகுதிகள் இருக்கும். அதில் ஒரு பகுதியில் வேட்பாளர்களின் பெயர்கள் இருக்கும். மற்றொரு பகுதியில் யாரைத் தேர்வு செய்யவிருப்பமோ, அவர்களை வரிசைப்படுத்தி எண்களைக் குறிப்பிட வேண்டும்.

மொத்த வாக்காளர்களில் 50 சதவீத வாக்குகளைப் பெறுவோரே, வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

குடியரசு துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர், இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். 35 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கவேண்டும். மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கத் தகுதியானவராக இருக்க வேண்டும். லாபம் தரும் அரசுப் பதவிகளை வகிக்கக் கூடாது ஆகியவை விதிகளாகும்.

இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நாடாளுமன்ற வளாகத்தில் மும்முரமாக நடைபெற்று முடிந்துள்ளன. இன்று காலை வாக்களிப்பு தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நாடாளுமன்றச் செயலர்கள் மற்றும் அதிகாரிகள் கவனித்து வருகின்றனர்.

இத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜெகதீப் தன்கருக்கு ஆதரவு அதிகமாக உள்ளது. பாஜக எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி எம்.பி.க்கள் வாக்களித்தாலே போதும், அவர் எளிதில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

டிஆர்எஸ், பகுஜன் சமாஜ் ஆதரவு

இந்நிலையில், குடியரசுத் துணை தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவுக்கு ஆதரவு அளிப்பதாக தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) அண்மையில் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக டிஆர்எஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “டிஆர்எஸ் கட்சியின் தலைவரும், தெலங்கானா முதல்வருமான கே.சந்திரசேகர் ராவ், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளார். அதன்படி,தெலங்கானா ராஷ்டிர சமிதியின் 16 எம்.பி.க்களும் அவருக்கு வாக்களிக்க அறிவுறுத்தப்படுகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, மார்கரெட் ஆல்வாவுக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதியும் ஆதரவு அளித்துள்ளார். மேலும், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சியும், அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் மார்கரெட் ஆல்வாவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளன.

இதனிடையே, “குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எம்.பி.க்கள் அனைவரும் அச்சமின்றியும், அரசியல் அழுத்தத்துக்கு உட்படாமலும் வாக்களிக்க வேண்டும்” என்று எதிர்க்கட்சிகள் தரப்புவேட்பாளர் மார்கரெட் ஆல்வா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெறுவதாலும், கொறடா உத்தரவு கட்டுப்படுத்தாது என்பதாலும், எம்.பி.க்கள் அனைவரும் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும். மேலும், அரசியல் அழுத்தத்துக்கு உட்படாமல், இப்பதவிக்குப் பொருத்தமான வேட்பாளரைத் தேர்வு செய்ய வேண்டும். கட்சி வேறுபாடுகளைக் கடந்து, எனக்கு வாக்களிக்குமாறு எம்.பி.க்களுக்கு கோரிக்கை விடுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x