பிஹார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் உயிரிழப்பு; 10 பேர் பார்வையிழப்பு

பிஹார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் உயிரிழப்பு; 10 பேர் பார்வையிழப்பு
Updated on
1 min read

பாட்னா: பிஹார் மாநிலம் சரண் மாவட்டம் சாப்ரா நகருக்கு அருகே உள்ள மாகெர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கள்ளச்சாராயத்தை நேற்று குடித்துள்ளனர்.

அந்தக் கள்ளச்சாராயம் விஷமாக மாறியதால் இதுவரை 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். மேலும் 10 பேருக்கு பார்வை பறிபோய்விட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் 35 பேர் பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து உடனடியாக அங்கு மருத்துவக் குழுவும் விரைந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் மீனா கூறும்போது, “மாகெர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த மக்கள், திருவிழாவையொட்டி கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். சாராயம் விஷமாக மாறிவிட்டதால் பலர் உயிரிழந்துள்ளனர். கவலைக்கிடமாக உள்ளவர்களைக் காப்பாற்ற போராடி வருகிறோம்” என்றார்.

மாவட்ட போலீஸ் எஸ்.பி. சந்தோஷ் குமார், “கள்ளச்சாராய விற்பனை நடைபெறுகிறதா என்று மாகெர், மர்கவுரா, பேல்டி போலீஸ் நிலையப் பகுதிகளில் சோதனை நடத்தி வருகிறோம். சம்பவத்துக்கு காரணமானவர்களை விரைவில் கைது செய்வோம்" என்றார்.

பல்வேறு உள்ளூர் திருவிழாக்களில் சாராயம் குடிப்பதை இப்பகுதி மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். நேற்று நாக பஞ்சமி என்பதால் இப்பகுதி மக்கள் சாராயம் குடித்ததால் உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் முதல் தற்போது வரை கள்ளச்சாராயம் காரணமாக பிஹாரில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. -பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in