நீதித்துறையை துடைத்து எறிய விரும்புகிறீர்கள்: மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றம் சாடல்

நீதித்துறையை துடைத்து எறிய விரும்புகிறீர்கள்: மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றம் சாடல்
Updated on
2 min read

நீதிபதிகள் நியமன விவகாரத்தில் காலியிடங்களை நிரப்புவதில் மத்திய அரசு தனது வாக்குறுதியை காப்பாற்றவில்லை என்று சாடிய உச்ச நீதிமன்றம், நீதித்துறையை மத்திய அரசு துடைத்தெறிய விரும்புகிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளது.

3 நீதிபதிகள் கொண்ட திறந்த நீதிமன்ற அமர்வு விசாரணையின் போது, தலைமை நீதிபதி தாக்குர் “நீதித்துறையை சிதைத்து இயங்காத நீதிமன்றங்கள் மூலம் நீதியை விரட்ட விரும்புகிறீர்கள்.

கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் இல்லாமல் நீதிமன்றங்கள் செயல்படாமல் முடங்கியுள்ளன. முன்பு நிறைய நீதிபதிகள், ஆனால் நீதிமன்ற அறைகள் இல்லை என்ற நிலை இருந்தது. ஆனால், இன்றோ கோர்ட் அறைகள் உள்ளன, நீதிபதிகள் இல்லை.

இப்போது நீதிமன்ற அறைகளை மூடி நீதியை விரட்டி விடுகிறீர்கள். இருதரப்பிலும் இந்த விவகாரத்தில் நிறைய விருப்பு வெறுப்புகள் உள்ளன. தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய (என்.ஜே.ஏ.சி) சட்டத்தை அரசியல் சாசன அமர்வு நிராகரித்த பிறகு மத்திய அரசு நீதிபதிகள் நியமனங்கள் குறித்து புதிய நடைமுறை ஒப்பந்தம் உருவாக்குமாறு உத்தரவிட்டது. ஆனால் கடந்த 9 மாதங்களாக எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

எதுவும் நடக்கவில்லை. கடந்த 9 மாதங்களாக கொலீஜியம் கொடுத்த பெயர்கள் உங்களிடம் தூங்குகின்றன. அந்தப் பெயர்கள் மீது நீங்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். எதற்காக நீங்கள் காத்திருக்கிறீர்கள்? அமைப்பில் ஏதேனும் மாற்றம் வரும் வரையிலுமா? அமைப்பில் புரட்சி வரும்வரையிலா?” என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பினார்.

அலஹாபாத் நீதிமன்றத்திற்கு கொலீஜியம் 18 நீதிபதிகளை பரிந்துரை செய்தது. இதில் அரசு 8 பேரை தேர்வு செய்தது. ஆனால் இப்போது இந்த 8 நீதிபதிகளிலும் 2 பேரை மட்டும் தேர்வு செய்துள்ளது என்பதை நீதிபதி தாக்குர் சுட்டிக்காட்டினார்.

நீதிபதிகள் நியமனம் தொடர்பாக நீதித்துறை சார்ந்த செயலர்கள் மற்றும் பிரதமர் அலுவலக செயலர்களையும் நீதிமன்றம் ஆவணங்களுடன் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டு பிறகு அந்த உத்தரவை ரத்து செய்தது.

“நிறுவனங்களிடையே நான் மோதல் போக்கு ஏற்படும் சூழலை நாங்கள் விரும்பவில்லை. இது எந்த ஒருவரின் ஈகோ சம்பந்தப்பட்டதும் அல்ல. இது தனிப்பட்டதும் அல்ல. இது அவதியுறும் நீதித்துறை பொறுத்தது” என்று தலைமை நீதிபதி கூறினார்.

இதற்குப் பதில் அளித்த அட்டர்னி ஜெனரல் முகுல் ரொஹாட்கி, நீதிபதிகள் நியமனங்களுக்கு முன்பாக நடைமுறை ஒப்பந்தத்திற்குரிய சட்டம் முதலில் இறுதி செய்யப்பட வேண்டும் என்று பதில் அளித்தார். இதற்கு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர்,

“நடைமுறை ஒப்பந்தம் நீதிபதிகள் நியமன நடைமுறையை தடுப்பதல்ல என்று சட்ட அமைச்சரும் மத்திய அரசும் பலமுறை கூறிவிட்டது. நீதிபதிகள் நியமனங்களுக்கு முன்னால் முதலில் நடைமுறை ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை களைய வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்களா?

நடைமுறை ஒப்பந்தம் முதலில் அமல்படுத்தப்பட வேண்டும் என்று அரசு விரும்பியிருந்தால் முதலிலேயே தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய அமர்விடம் தெரிவித்திருக்க வேண்டும். இப்போது கூறக்கூடாது” என்றார்.

“நடைமுறை புரிந்துணர்வு ஒப்பந்தம் இல்லாமலேயே அனைத்தையும் செய்து விட முடியும் என்ற போது இப்போது ஏன் அது வேண்டுமென்கிறீர்கள்” என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரொஹாட்கி பதில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு டி.எஸ்.தாக்குர், “நடைமுறை புரிந்துணர்வு ஒப்பந்தம் இப்போது இல்லை என்று யார் கூறுவது? நீதிபதிகள் நியமனம் பழைய முறைப்படி நடந்துள்ளது. எங்களது பொறுமையான அணுகுமுறை வேலைக்கு உதவவில்லை என்று புரிந்து கொள்கிறோம். நீங்கள் இப்படியே சென்று கொண்டிருந்தால் மீண்டும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைத்து புதிய நடைமுறை ஒப்பந்தத்தை உருவாக்கும்வரை நீதிபதிகள் நியமனங்களை அரசு முடக்கி வைக்க முடியாது என்று கூற வைப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. நீங்கள் இதனை விரும்புகிறீர்களா?” என்று கூறிய தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் இந்தப் பிரச்சினைக்கு அரசு தீர்வு கண்டு நவம்பர் 11-ம் தேதி கோர்ட்டுக்கு பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தது.

நீதிபதிகள் நியமன விவகாரத்தில் அரசின் மந்தமான போக்கை ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தனது ஆகஸ்ட் 8 விசாரணையின் போது கடுமையாக விமர்சித்து, “நீதிபதிகள் நியமனங்களில் உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்த பெயர்களின் மீது அமர்ந்து கொண்டு நீதிபதிகள் நியமனங்களை தள்ளி வைத்து கொண்டே சென்று நீதித்துறையின் செயல்பாடுகளையே முடக்க விரும்புகிறீர்களா? என்று கடுமையாக கேள்வி எழுப்பியதும் இதனுடன் தொடர்புபடுத்தி நோக்கத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in