

மத்திய அரசின் எதிர்ப்பு காரணமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வரும் 7-ம் தேதியில் இருந்து 18-ம் தேதி வரை தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான தமிழக அரசின் மனுவை கடந்த 30-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், அக்டோபர் 4-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கு முதலில் ஒப்புக்கொண்ட மத்திய அரசு நேற்று முன்தினம் திடீரென எதிர்ப்பு தெரிவித்து புதிய மனுவைத் தாக்கல் செய்தது.
இந்த மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யூ.யூ.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசின் தரப்பில் ஆஜ ரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி வாதாடும்போது, “காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. இதை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் மட்டுமே அமைக்க முடியும்.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பையும்,காவிரி மேலாண்மை வாரியத்தையும் எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மனு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு வரும் 18-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
எனவே கடந்த செப்டம்பர் 20 மற்றும் 30 ஆகிய தேதிகளில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும்” என்றார்.
இதையடுத்து கர்நாடக அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ். நாரிமன், “உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த செப்டம்பர் 5-ம் தேதியில் இருந்து 30-ம் தேதி வரை 17.5 டிஎம்சி நீரை திறந்துவிட்டுள்ளோம். கர்நாடகாவில் தற்போது குறை வாக மழை பெய்துள்ளதால் அக்டோபர் 6-ம் தேதிக்குள் 3.1 டிஎம்சி நீரைத் திறந்துவிடவும் கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது” என அறிக்கை தாக்கல் செய்தார்.
இதற்கு நீதிபதிகள், “காவிரி நடுவர் மன்ற உத்தரவுப்படி கர்நாடக அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை எப்போது திறக்க போகிறீர்கள்? நீதிமன்றம் உத்தரவிட்டாலும் நீரை திறக்க மறுக்கிறீர்கள்? நீங்களே சொல்லுங்கள் எவ்வளவு நீரை உங்களால் திறக்க முடியும்?” என கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து நாரிமன், “கர் நாடக அணைகளில் தற்போது உள்ள நீர் இருப்பை பொறுத்து அதிகப்பட்சம் ஒரு வாரத்துக்கு 1,500 கன அடி நீர் வரை திறந்து விட முடியும். கூடுதல் நீர் திறக்க முடியாது. கோடிக்கணக்கான மக்களின் குடிநீரைக் கருத்தில் கொள்ளாமல் உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது. எதன் அடிப் படையில் இத்தகைய உத்தரவு களைப் பிறப்பிக்கிறது?
வெறும் கணிதத்தின் அடிப் படையில் மட்டுமே நதி நீர் பங்கீட்டு பிரச்சினையைத் தீர்க்க முடியாது. உண்மையில் கள நிலவரம் வேறாக இருக்கிறது. இதன் காரணமாக கடந்த முறை நீதிமன்ற உத்தரவைக் கர்நாடக அரசால் நிறைவேற்ற முடியவில்லை. நீதிமன்ற உத்தரவை மீறியது தவறு தான். இது தொடர்பாக நீதிமன்ற அதிகாரி என்ற முறையில் நான் கர்நாடக அரசின் முடிவைக் கண்டித்தேன். கடந்த முறை வாதிடுவதைக் கூட தவிர்த்தேன். எனவே, காவிரி நீரை திறக்க உத்தரவிடும் முன்பு நிபுணர் குழுவை அனுப்பி காவிரி நீர்ப்பாசன மாநிலங்களை பார்வையிட வேண்டும்” என்றார்.
தயங்குவது ஏன்?
இதற்கு தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே, “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முதலில் ஒப்புதல் அளித்த மத்திய அரசு தற்போது தயங்குவது ஏன்? மத்திய அரசின் இந்த மனுவில் உள்நோக்கம் இருக்கிறது. கர்நாடகாவில் அரசியல் ஆதாயம் பெறுவதற்காக மத்திய அரசு இந்த மனுவை திடீரென தாக்கல் செய்திருப்பதாக சந்தேகம் எழுகிறது. எனவே மத்திய அரசின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்.
தமிழகத்துக்குக் காவிரி நீரைத் திறக்குமாறு உச்ச நீதிமன்றம் மூன்றுமுறை உத்தரவிட்டும் கர்நாடக அரசு அதை அவமதித்து இருக்கிறது. தனி நபர் நீதிமன்ற உத்தரவை மீறினால் நீதிமன்றம் நடவடிக்கை எடுப்பதுபோல கர்நாடக அரசு மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதித்த முன்னாள் கர்நாடக முதல்வர் நீதிமன்றத்துக்கு வந்து, மன்னிப்பு கோரினார். அதுபோல இப்போது கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தயங்குவது ஏன்?
கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வரை கர்நாடகா 17.5 டிஎம்சி நீரைத் திறந்துவிட்டதாக கூறுகிறது. ஆனால் பிலிகுண்டு அளவை நிலையத்தில் இருந்து தமிழகத்துக்கு 16.9 டிஎம்சி நீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கும் தவறான தகவல்களை ஏற்காமல், காவிரி நடுவர் மன்ற உத்தரவின்படி அக்டோபர் மாதத்தில் வழங்க வேண்டிய 22 டிஎம்சி நீரை உடனடியாக திறக்க உத்தரவிட வேண்டும்” என்றார்.
உச்ச நீதிமன்றம் பின் வாங்கியது
மூன்று தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் அது தொடர்பான உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி வரும் 6-ம் தேதி வரை நீரைத் திறக்க முடிவு செய்திருப்பதாக கர்நாடகா தெரிவித்துள்ளது. எனவே வரும் 7-ம் தேதியில் இருந்து 18-ம் தேதி வரை தமிழகத்துக்கு நொடிக்கு 2 ஆயிரம் கன அடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும்.
மத்திய அரசு மத்திய நீர் ஆணையத் தலைவர் ஜி.எஸ்.ஜா தலைமையில் தொழில்நுட்ப நிபுணர் குழுவை நியமித்து, காவிரி நதியால் பயன் அடையும் கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கும் அனுப்ப வேண்டும். இந்த குழுவில் காவிரி மேற்பார்வை குழுவின் தலைவர் சையது மசூத் ஹுசேன், மத்திய நீர்வளத்துறையின் தலைமை பொறியாளர் ஆர்.கே.குப்தா, 4 மாநிலங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இடம்பெற வேண்டும்.தேவைப்பட்டால் மாநில தலைமை செயலர், தலைமை பொறியாளர் உள்ளிட்டோருடம் இடம் பெறலாம்.
இந்த குழு காவிரியின் குறுக்கேயுள்ள அணைகள் மற்றும் 4 மாநிலங்களையும் முறையாக ஆய்வு செய்து வரும் 17-ம் தேதிக்குள் விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர்.
மீண்டும் நாரிமன் ஆஜரானது எப்படி?
காவிரி வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காத கர்நாடக அரசுக்காக வாதிட மாட்டேன் என வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் கடந்த 30-ம் தேதி நீதிமன்றத்திலே தெரிவித்தார். நாரிமனுக்கு எதிராக கர்நாடக பாஜக, மஜத ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பகிரங்கமாகவே போர்க்கொடி தூக்கினர். இதனால் நாரிமன் கர்நாடக அரசு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து விலக முடிவெடுத்தார்.
இதையடுத்து கர்நாடக அரசின் புதிய வழக்கறிஞராக கபில் சிபல் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் டெல்லி சென்று நாரிமனை சந்தித்து சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். முதல்வர் சித்தராமையாவும் நாரிமனை தொலைபேசியில் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்தார். கர்நாடகாவுக்காக தொடர்ந்து ஆஜராகி வாதிடுமாறு வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து நாரிமன் நேற்று மறுபடியும் ஆஜராகி கர்நாடகாவுக்காக வாதிட்டார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் அது தொடர்பான உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது. தமிழகத்துக்கு நொடிக்கு 2 ஆயிரம் கன அடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும்.