விபத்தில் தந்தை காயம்... உணவு டெலிவரி செய்த பள்ளிச் சிறுவன்... - ஜொமோட்டோ விளக்கம்

விபத்தில் தந்தை காயம்... உணவு டெலிவரி செய்த பள்ளிச் சிறுவன்... - ஜொமோட்டோ விளக்கம்
Updated on
2 min read

ஜொமோட்டோவில் வேலைசெய்து வந்த தந்தை விபத்தில் காயமடைந்ததால், குடும்பத்தைக் காப்பாற்ற, தந்தையின் வேலையைப் பார்த்த பள்ளிச் சிறுவனின் வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

உணவு டெலிவரி செய்து வந்த ஒரு பள்ளிச் சிறுவன், வலது கையில் சாக்லெட் பாக்கெட்டும் இடது கையில் மொபைல் போனும் வைத்துள்ளான். பள்ளிச் சிறுவனுக்கும் உணவு ஆர்டர் செய்தவருக்கும் இடையில் இந்தியில் உரையாடல் நடக்கிறது. அதில் தனது அப்பாவிற்கு விபத்து நேர்ந்து விட்டதால், அவரின் வேலையை தான் செய்வதாகவும், பகலில் பள்ளிக்குச் செல்லும் தான் மாலை 6 மணியில் இருந்து 11 மணி வரை உணவு டெலிவரி பாயாக பணிபுரிவதாக கூறுகிறான். உணவு வழங்க சைக்கிளில் செல்வதாகவும் தெரிவிக்கிறான் சிறுவன்.

30 விநாடிகள் ஓடும் இந்த வீடியோவை ராகுல் மிட்டல் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்து, ‘இந்த 7 வயது சிறுவன், அவனது தந்தை காயமடைந்த காரணத்தினால், காலையில் பள்ளிக்குச் சென்றும், மாலையில் 6 மணியிலிருந்து ஜொமோட்டோவில் உணவு டெலிவரி பாயாகவும் வேலை பார்க்கிறான். நாம் இந்த சிறுவனின் உத்வேகத்தை பாராட்டி, அவனது தந்தை விரைவில் குணமடைய உதவ வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

வாழ்த்தும் வசையும்:

ஆக.1-ம் தேதி ராகுல் மிட்டல் பதிவிட்ட இந்த செய்தியை 32,000-க்கும் அதிகமான பேர் படித்திருந்தனர். பலர் சிறுவனின் முயற்சியை வாழ்த்திப் பாராட்டியிருந்த நிலையில், சிலர் இந்த சோகமான நிகழ்வை கண்டித்தும் இருந்தனர்.

சப்னா ராவத் என்பவர், "சிறுவன் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த அவனது தந்தை விரைவில் குணமடைந்து பணிக்குத் திரும்புவார் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சுமித் பத்ரா என்பவர், “விரைவில் குணமடைய சிறுவனின் தந்தையும் இந்தச் சிறுவனையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஷா ஃபாசில் என்பவர், “உங்களுடைய சிறப்பான பரிசு மற்றும் உதவிக்கு நன்றி. சிறுவனுக்கு இது சிறப்பான நாள்” என்று கூறியுள்ளார்.

விட்ஜென்ஸ்டைன் என்பவர், “சோகமான இந்தக் கதையை இதை தன்னம்பிக்கை கதையாக மாற்றாதீர்கள். ஜொமோட்டோ இந்த சிறுவனுக்கு பண உதவி செய்து அதனை ஒரு விளம்பரமாக செய்ய முடியும். ஆனால், அவர்கள் கொள்கை முடிவில் எந்த மாற்றமும் செய்ய மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

தாய் கரம் என்ற கணக்கில் உள்ளவர், “உணர்ச்சிகளை பின்னுக்கு தள்ளிவிட்டு பாருங்கள். ஜொமோட்டோ விதிகளை மீறியுள்ளது. சிறுவனால் இருசக்கர வாகனம் ஓட்ட முடியாது. அதனால் வேலையும் செய்யமுடியாது” என்று கூறியிருக்கிறார்.

இந்த பதிவிற்கு ஜொமோட்டோ நிறுனமும் பின்னுட்டமிட்டுள்ளது. ராகுல் மிட்டலிடம், தனிச் செய்தியில் அந்தச் சிறுவனுடைய தந்தையின் தகவல்களை பரிமாற கேட்டுள்ளது.

ஜொமோட்டோ பதில்

இதுகுறித்து ஜொமோட்டோ செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தச் செய்தியை எங்களின் கவனத்திற்கு கொண்டுவந்த சமூக வலைதளவாசிகளுக்கு நன்றி. இங்கு குழந்தை தொழிலாளர், தவறாக சித்தரித்தல் என பல்வேறு நிலைகளில் விதிகள் மீறப்பட்டுள்ளன. இந்தக் குடும்பத்தின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு எந்த வித தீவிர நடவடிக்கையும் எடுக்காமல், அந்தக் குடும்பத்தினருக்கு நிலைமையை புரியவைத்தோம்.

வீடியோவில் உள்ள 14 வயது சிறுவனின் படிப்பிற்கு ஜொமோட்டோ ஃபியூச்சர் ஃபவுண்டேஷன் மூலமாக உதவ இருக்கிறோம். பணியில் இல்லாதபோது விபத்து நடந்துள்ளதால் , ஊழியர்களுக்கான விபத்து உதவி அவருக்கு வழங்க முடியாது என்றாலும், மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு முடிந்த உதவிகளை எங்கள் குழு அளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in