Published : 04 Aug 2022 11:18 AM
Last Updated : 04 Aug 2022 11:18 AM
புதுடெல்லி: விண்வெளி தொடர்பான திட்டங்களுக்கான அனுமதிக்கு தாமதம் இல்லை என மக்களவையில் மத்திய அமைச்சர் ஜிதேந்தரா சிங் தகவல் அளித்துள்ளார். இதை அவர், திமுக எம்.பி. டி.ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கான பதிலில் தெரிவித்தார்..
இது குறித்து பிரதமர் அலுவலகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் அளித்த பதிலில் கூறியதாவது: உலக விண்வெளிப் பொருளாதாரத்தின்( குளோபல் ஸ்பேஸ் எகானமியின்) சரியான அளவை மதிப்பிடுவது ஒரு சிக்கலானதும் விவாதத்திற்குரியதுமான விஷயம் ஆகும்.
2019 ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி, உலக விண்வெளிப் பொருளாதாரம் 360 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதில் இந்தியாவின் பங்கு தோராயமாக 2 சதவிகிதம் ஆகும். விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடுகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) தலைமையில் பூமி கண்காணிப்பு, செயற்கைக்கோள் தகவல் தொடர்பு, வானிலை ஆய்வு, விண்வெளி அறிவியல் மற்றும் வழிசெலுத்தல் உள்ளடக்கிய விண்வெளி சொத்துக்கள்; தரை உள்கட்டமைப்பு, மற்றும் தேசிய தேவைகள்; மனிதர்கள் மற்றும் சமூகத்தின் பொதுவான தேவைகளை நிவர்த்தி செய்யும் விண்வெளித் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் என அனைத்து களங்களிலும் உள்நாட்டுத் திறன்களைப் பெற்றுள்ளது.
விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்பான திட்டங்களுக்கு அனுமதி கிடைப்பதில் தாமதம் இல்லை. இவ்வாறு அமைச்சர் தன் பதிலில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக விழுப்புரம் மக்களவை தொகுதி எம்.பி.,யான ரவிக்குமார் எழுப்பிய கேள்வியில், ''உலகளாவிய விண்வெளி பொருளாதாரத்தில் நமது நாட்டின் பங்கு என்ன? விண்வெளி ஆராய்ச்சியில் நமது நாட்டின் மோசமான செயல்பாட்டிற்கான காரணங்கள் யாவை? அரசிடம் அனுமதி பெறுவதில் ஏற்படும் காலதாமதம் விண்வெளித் தொழில்நுட்ப வளர்ச்சியில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா?'' எனக் கேட்டிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT