Published : 04 Aug 2022 09:57 AM
Last Updated : 04 Aug 2022 09:57 AM
டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இதில் 5 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். 4 பேர் டெல்லியைச் சேர்ந்தவர்கள். 9 பேரில் 5 பேர் வெளிநாட்டவர்.
31 வயதான அப்பெண் காய்ச்சல் மற்றும் கொப்புளங்களுடன் டெல்லி லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவரது ரத்த மாதிரிகள் சோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
இந்நிலையில் அவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியாகியுள்ளது. முன்னதாக நேற்று 35 வயதான டெல்லியில் வசிக்கும் வெளிநாட்டுப் ஆணுக்கு குரங்கு அம்மை உறுதியானது. அவர் அண்மையில் வெளிநாடுகளுக்கு ஏதும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மாநிலத்தில் உள்ள மூன்று தனியார் மருத்துவமனைகளில் குரங்கு அம்மை தனிமைப்படுத்துதல் வார்டுகளை உருவாக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
திங்கள்கிழமையன்று டெல்லியின் முதல் குரங்கு அம்மை தொற்றாளர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
உலக சுகாதார நிறுவனக் குறிப்பின்படி, குரங்கு அம்மை பெரியம்மை ஏற்படுத்தும் வைரஸ் குடும்பத்தால் உருவாகும் பாதிப்பு. ஆனால் பெரியம்மையைவிட குறைவான அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.
நோய்த் தொற்று ஏற்பட்டவரின் படுக்கை, போர்வை, துண்டு போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. அறிகுறி காணப்பட்ட உடனேயே மருத்துவமனையை நாட வேண்டும். மருத்துவர்கள் குரங்கு அம்மையாக இருக்கும் என்று சந்தேகப்பட்டால் கூட அந்த நபரை தனிமைப்படுத்திட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT