Published : 04 Aug 2022 05:58 AM
Last Updated : 04 Aug 2022 05:58 AM
புதுடெல்லி: மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக (சிவிசி) சுரேஷ் என்.படேல் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் (சிவிசி) பணியிடம் கடந்த ஓராண்டாக காலியாக இருந்த நிலையில் இடைக்கால சிவிசி.யாக சுரேஷ் என்.படேல் கடந்த ஜுன் மாதம் முதல் செயல்பட்டு வந்தார். அவரை அடுத்த சிவிசியாக நியமிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நியமனக்குழு கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் சிவிசி.யாக சுரேஷ் என்.படேல் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இதற்கான விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் (சிவிசி) தலைமை வகிக்கிறார். இவர் தவிர மேலும் இருவர் ஊழல் கண்காணிப்பு ஆணையர்களாக பதவி வகிக்க முடியும்.
ஆந்திர வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான சுரேஷ் என்.படேல் கடந்த 2020 ஏப்ரலில் ஊழல் கண்காணிப்பு ஆணையராக பதவியேற்றார். இவரே தற்போது சிவிசி.யாக பதவியேற்றுள்ளார்.
பிரதமர் தலைமையிலான நியமனக்குழு கடந்த மாதம் ஊழல் கண்காணிப்பு ஆணையர்களாக முன்னாள் உளவுத் துறை தலைவர் அர்விந்த் குமார், நுகர்வோர் விவகாரத் துறை முன்னாள் செயலாளர் அவினாஷ் குமார் ஸ்ரீவத்சவா ஆகியோரை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT