Published : 04 Aug 2022 04:44 AM
Last Updated : 04 Aug 2022 04:44 AM

சோனியா, ராகுலிடம் நடத்திய விசாரணைக்கு பிறகு நேஷனல் ஹெரால்டு அலுவலகத்துக்கு சீல் - அமலாக்கத் துறை நடவடிக்கை

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தின் ஒரு பகுதியை அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று பூட்டி சீல் வைத்தனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் இயக்குநர்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம், ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை கடந்த 2010-ம் ஆண்டு கையகப்படுத்தியது. இதில் மிகப்பெரிய அளவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார்.

இந்த மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பவன் குமார் பன்சால் ஆகியோரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, லக்னோ ஆகிய இடங்களில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கடந்த மாதம் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியபோது டெல்லி உள்பட நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல, கடந்த வாரம் சோனியாவிடம் விசாரணை நடத்தியபோதும் காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், தலைவர்கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலக வளாகத்தில் உள்ள யங் இந்தியா ஹவுஸ் அலுவலக பகுதியை அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று பூட்டி சீல் வைத்தனர். அனுமதி இன்றி அலுவலக வளாகத்தை திறக்கக் கூடாது என்றும் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதுகுறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:

வழக்கில் கூடுதல் ஆதாரங்களை சேகரிக்கும் வகையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) குற்றவியல் பிரிவின்கீழ் நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. நேஷனல் ஹெரால்டு ஹவுஸ் கட்டிடத்தில், யங் இந்தியா நிறுவனம் இயங்கி வந்த அலுவலகப் பகுதி மட்டும் தற்போது தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளது. சீல் வைக்கும்போது அலுவலகத்துக்குள் யாரும் இல்லை.

சீல் வைக்கப்பட இருந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அலுவலக வளாகத்துக்கு வந்து பார்வையிட்டார். பின்னர் அவர் புறப்பட்டுச் சென்றுவிட்டார். அதன்பிறகு நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தின் ஒரு பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது. அமலாக்கத் துறையின் உத்தரவின்றி யாரும் அந்த சீலை அகற்றக் கூடாது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

போலீஸ் குவிப்பு

நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தின் ஒரு பகுதி சீல் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து சோனியா காந்தி வீட்டின் முன்பு கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலக வளாகத்திலும் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x