Published : 03 Aug 2022 07:26 AM
Last Updated : 03 Aug 2022 07:26 AM
திருவனந்தபுரம்: கேரளாவில் கன மழை பெய்துவரும் நிலையில், 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மழை, வெள்ளத்துக்கு 6 பேர் உயிரி ழந்துள்ளனர்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தென்மேற்கு பருவமழையுடன் மத்திய தெற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும் சேர்ந்து கொண்டதால் கேரளா முழுவதும் மிக பலத்த மழை பெய்து வருகிறது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு இடி யுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிப்பை தொடர்ந்து கேரள மாநில அரசு முன்னேற்பாடு பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
மேலும் மழை அதிகம் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படும் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த மாவட்டங்களில் மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
கேரளாவில் கடந்த 2 நாட்களில் பெய்த மழைக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 6 பேர்பலியானார்கள். பத்தினம்திட்டா மாவட்டத்தில் வெண்ணிக்குளம் பகுதியில் சென்ற கார் ஒன்று சாலையோர ஓடையில் கவிழ்ந்தது. இதில் கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. காரில் இருந்த 3 பேர் இறந்தனர்.
இதேபோல இடுக்கி மற்றும் கும்பாவுருட்டு அணை பகுதியிலும் வெள்ளத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். மாநிலம் முழுவதும் மழைக்கு 55 வீடுகள் சேதமடைந்துள்ளது. இதில் 5 வீடுகள் முழுமையாகவும், 500 வீடுகள்பகுதி அளவிலும் சேதம் அடைந்துள்ள தாக வருவாய் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
வீடுகளை இழந்தவர்கள் அனைவரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் நிவாரணமுகாம்கள் திறக்கப்பட்டு உள்ளன.கேரளாவில் கடலோர பகுதிகளிலும் சூறைக்காற்று வீசி வருகிறது. கடலும்கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் கடலுக்கு சென்ற மீனவர்கள் அனைவரும் கரை திரும்பி வருகிறார்கள்.
கேரளாவில் மழை வெள்ள சேதங்களை தடுக்க மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகை யில், ‘‘கேரளாவில் கனமழை மற்றும் வெள்ளத்துக்கு 6 பேர் பலியாகி உள்ளனர்.
4 கம்பெனி தேசியபேரிடர் மீட்பு குழுவினர் வந்துள்ளனர். அவர்கள் இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு மற்றும் திருச்சூர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் 4 கம்பெனி தேசிய பேரிடர் மீட்பு படையினர் வர உள்ளனர். அவர்களும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT