தமிழகம் - கர்நாடகா இடையே காவிரி பிரச்சினையால் முடங்கிய பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது

தமிழகம் - கர்நாடகா இடையே காவிரி பிரச்சினையால் முடங்கிய பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது
Updated on
1 min read

காவிரி பிரச்சினை காரணமாக தமிழகம் - கர்நாடகா இடையே கடந்த ஒரு மாதமாக முடங்கி கிடந்த பஸ் போக்குவரத்து நேற்று மீண்டும் தொடங்கியது. இதனால் எல்லையோர மக்களும், சுற்றுலா பயணிகளும் ம‌கிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்துக்கு காவிரி நதி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கண்டித்து கன்னட அமைப்பினர் மற்றும் விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூ ருவில் தனியார் பஸ்கள், சரக்கு லாரிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக கர்நாடகாவுக்கு இயக்கப்பட்ட தமிழக அரசு பஸ்கள் ஓசூர், சத்திய மங்கலம் உள்ளிட்ட எல்லையோர பகுதிகளிலே நிறுத்தப்பட்டன. இதனால் ஓசூரில் இருந்து தினமும் லட்சக்கணக்கான பயணிகள் கால்நடையாகவே பெங்களூரு சென்று வரும் அவல நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் இரு மாநில அரசும் பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டு, வாகன போக்குவரத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து தமிழகம் - கர்நாடகா ஆகிய இரு மாநில காவல் துறையினரும், அரசு போக்கு வரத்துக் கழக அதிகாரிகளும் பேச்சு வார்த்தையை தொடங்கினர். இதில் உரிய பாதுகாப்புடன் வாகனங்கள் இயக்க முடிவெடுக்கப்பட்டதால், நேற்று முன் தினம் கர்நாடகாவுக்கு சரக்கு லாரிகள் வாகன போக்கு வரத்து தொடங்கியது. இதையடுத்து இரு மாநில காவல்துறை மற்றும் அதிகாரிகளின் ஒப்புதலோடு நேற்று தமிழகம் - கர்நாடகா இடையே மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதனால் இரு மாநில பொது மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in