Last Updated : 02 Aug, 2022 07:46 PM

 

Published : 02 Aug 2022 07:46 PM
Last Updated : 02 Aug 2022 07:46 PM

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணியை மாநில அரசுகளிடம் ஒப்படைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு

மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய்

புதுடெல்லி: மக்கள் தொகைக் கணக்கெடுப்பு செய்யும் பணியை மாநில அரசுகளிடம் ஒப்படைக்கும் திட்டம் இல்லை என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் தெரிவித்துள்ளார். ரவிக்குமார் எம்.பி எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார், “இந்த ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அரசு நடத்தப் போகிறதா? அப்படியானால், அதன் விவரங்களைத் தருக; கோவிட் தொற்றுநோய் காரணமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டதற்கான பிற காரணங்கள் இருந்தால் அதன் விவரங்களைத் தருக; மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஒரே நேரத்தில் கொண்டு வருவதற்கும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மாநில அரசுகள் மேற்கொள்ள அனுமதிப்பதற்கும் ஏதேனும் திட்டம் உள்ளதா? அப்படியானால், அதன் விவரங்களைத் தருக” போன்ற கேள்விகளை எழுப்பி இருந்தார்.

இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த பதில்: “2021-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டம் மார்ச் 28, 2019 அன்று இந்திய அரசிதழில் அறிவிக்கப்பட்டது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2021 மற்றும் அத்துடன் தொடர்புடைய கள நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மாநில அரசுகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை” என்று அமைச்சர் கூறியுள்ளார்.

இதுகுறித்து ரவிக்குமார் எம்பி கூறுகையில், "கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகு அடுத்த கணக்கெடுப்பு 2021 -ல் நடந்திருக்க வேண்டும். கரோனாவைக் காரணம் காட்டி சென்சஸ் கணக்கெடுப்பை ஒத்திப்போடுவது ஏற்கத்தக்கதாக இல்லை. உத்தரப் பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களிலேயே தேர்தலை நடத்தும் போது சென்சஸ் கணக்கெடுப்பு நடத்த எந்தத் தடையும் இல்லை. மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் மூலமே இந்த ஆட்சியின்போது ஏற்பட்ட கல்வி வளர்ச்சி தெரிய வரும்.

அதுமட்டுமின்றி பல்வேறு நலத்திட்டங்களுக்கும் மக்கள் தொகையை அடிப்படையாக வைத்துதான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மிகவும் முக்கியமாக அடுத்து செய்யப்படவிருக்கும் தொகுதி மறு சீரமைப்பு 2021 சென்சஸ் அடிப்படையிலேயே நடத்தப்பட வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான தொகுதிகளின் எண்ணிக்கை அதன் அடிபடையில் உயர்த்தப்பட வேண்டும். இதையெல்லாம் செய்யாமல் இருப்பதற்காகத்தான் சென்சஸ் எடுக்காமல் பாஜக அரசு தள்ளிப் போடுகிறது. ஜனநாயகத்தில் பற்று கொண்டோர் சென்சஸ் கணக்கெடுப்புச் செய்யுமாறு வலியுறுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x