

நாடாளுமன்றம் தொடர்பான அதி முக்கிய ஆவணங்களைத் திருடி, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ.க்கு விற்றதாக சமாஜ் வாதி கட்சியைச் சேர்ந்த எம்.பி.யின் தனி உதவியாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து ராணுவ ரகசியங்களைப் பாகிஸ்தானுக்கு கடத்தியது தொடர்பாக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி மெகமூத் அக்தர், கடந்த 27-ம் தேதி டெல்லி போலீஸிடம் சிக்கினார்.
டெல்லி மண்டி ஹவுஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் மாதந்தோறும் ஃபர்ஹாத்கான் என்பவரை சந்தித்து, உளவுத் தகவல்களைப் பெற்றுவந்ததாக போலீஸிடம் அக்தர் தெரிவித் திருந்தார்.
சந்திப்பு நடந்த இடம், சமாஜ்வாதி கட்சியின் மாநிலங் களவை உறுப்பினரான சவுத்ரி முனாவரின் இல்லத்துக்கு மிக அருகில் இருந்தது போலீஸாரின் கவனத்துக்கு வந்தது. சவுத்ரியின் தனி உதவியாளராக ஃபர்ஹாத் கான் பணி புரிவதும் தெரியவந்தது.
இதையடுத்து கானை தீவிர மாக கண்காணித்த டெல்லி போலீஸார், கடந்த வெள்ளிக் கிழமை இரவு கைது செய்தனர். அவரை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருவதாக குற்றப் பிரிவு இணை கமிஷனர் ரவீந்திர யாதவ் தெரிவித்தார்.
நாடாளுமன்றம் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், நாடாளு மன்ற அறிக்கைகள் மற்றும் எம்.பி.க்களிடம் இருந்து கிடைக்கப் பெறும் இதர முக்கிய ஆவணங் கள் போன்றவற்றைத் திருடி பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ.க்கு விற்பதே கானின் பிரதானப் பணியாக இருந்துள்ளது.
ஆவணத்தின் முக்கியத்து வத்துக்கு ஏற்ப, ரூ.10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை, கான் பணம் வாங்கியுள்ளார். இதற்காக, பாகிஸ்தான் தூதரக அதிகாரியான அக்தருடன் தொலைபேசியிலும், நேரிலும் தொடர்பில் இருந் துள்ளார். அக்தர் மட்டுமின்றி, அவருக்கு முன்பு அப்பதவி வகித்த அதிகாரிகளுடனும் கானுக்கு தொடர்பு இருந்து வந்துள்ளது.
பாகிஸ்தான் தூதரகத்தில் புதிதாக எந்த அதிகாரி பொறுப் பேற்றாலும், அவர் கானுக்கு அறி முகப்படுத்தப்படுவது வழக்கமாக இருந்துள்ளது.
கடந்த, 20 ஆண்டுகளாகவே, நாடாளுமன்றம் தொடர்பான முக்கிய ஆவணங்களை ஐஎஸ்ஐ.க்கு கான் விற்றுவந் துள்ளார். தற்போது சவுத்ரியின் உதவியாளராக இருந்தாலும், 1996-ம் ஆண்டு முதல் 4 எம்.பி.க் களிடமும் பணிபுரிந்துள்ளார். இவர் களில் சிலர் நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள்.
இவ்விவகாரம் குறித்து தெரிய வந்தவுடன், ஃபர்ஹாத் கானை உடனடியாக பணியில் இருந்து நீக்கியுள்ளார் சவுத்ரி முனாவர். கானின் செயல்பாடுகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய சவுத்ரி, உளவு வேலையில் தனக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் கூறியுள்ளார்.
இஸ்ரோவிலும் கறுப்பு ஆடு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் பணி புரியும் ஒரு பணியாளரிடம் இருந் தும் உளவுத் தகவல் பெற்றதாக போலீஸ் விசாரணையில் அக்தர் தெரிவித்திருந்தார். அந்தத் தகவலின் உண்மைத்தன்மை குறித்தும், அது உண்மையானால், அக்தருடன் தொடர்புடைய அந்த நபர் யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.