மத்தியப் பிரதேசம் | தனியார் மருத்துவமனையில் தீ விபத்து: 10 பேர் பலி

மத்தியப் பிரதேசம் | தனியார் மருத்துவமனையில் தீ விபத்து: 10 பேர் பலி
Updated on
1 min read

ஜபல்பூர்: மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தீ விபத்து ஜபல்பூர் மாவட்டம் கோஹல்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சந்தல் பாடா எனும் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையான நியூ லைஃப் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஏற்பட்டது. முதற்கட்ட தகவலின்படி மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் தீவிர சிகிச்சை பிரிவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு சிகிச்சை பிரிவுகளுக்கு தீ பரவி உள்ளது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் முடிந்த வரை போராடி உள்ளனர். இருப்பினும் மின்துறை ஊழியர்கள் மருத்துவமனை அமைந்துள்ள பகுதியில் மின்சார இணைப்பை துண்டித்த பிறகே தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தப் பணியை தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மேற்கொண்டனர்.

மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட சூழலில் சிகிச்சை பெற்று வந்த உள்நோயாளிகள், புற சிகிச்சை நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வந்திருந்த உதவியாளர்கள் என பலரும் மருத்துவமனையில் இருந்து வெளியேற முற்பட்டுள்ளனர். ஆனால், மக்கள் வெளியேற மருத்துவமனையில் ஒரே ஒரு வழி மட்டுமே இருந்துள்ளது. அதனால் அங்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தீயணைப்பு வீரர்களுடன் உள்ளூர் மக்களும் தீயை அணைக்க உதவியுள்ளனர்.

இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாகவும், 3 பேர் தீ விபத்தில் சிக்கி மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் எஸ்.பி தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான். “இந்த துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தனித்து உள்ளதாக எண்ண வேண்டாம். ஒட்டுமொத்த மாநிலமும், நானும் உங்களுடன் இருக்கிறோம். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய் வழங்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மருத்துவ சிகிச்சைகளுக்கான செலவை அரசே ஏற்கும்” என அவர் ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கமல்நாத் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in