குஜராத் வைர வியாபாரி 2-வது ஆண்டாக அசத்தல்: தொழிலாளர்களுக்கு 1,260 கார்கள்,400 வீடுகள் தீபாவளி போனஸ்

குஜராத் வைர வியாபாரி 2-வது ஆண்டாக அசத்தல்: தொழிலாளர்களுக்கு 1,260 கார்கள்,400 வீடுகள் தீபாவளி போனஸ்
Updated on
1 min read

குஜராத் மாநிலம் சூரத்தில் ‘ஹரே கிருஷ்ணா வைர ஏற்றுமதி நிறுவனம்’ உள்ளது. இதன் உரிமையாளர் சவ்ஜி தோலக்யா. தனது நிறுவனத்தில் சிறப்பாகப் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டு கார்கள், வீடுகளை தீபாவளி போனஸாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

அதேபோல் இந்த ஆண்டும் 1,260 கார்கள், 400 வீடுகளை தனது தொழிலாளர்களுக்கு போனஸாக வழங்கி உள்ளார். இதுகுறித்து தோலக்யா நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘இந்த ஆண்டு சிறப்பாக பணியாற்றிய 1,716 தொழிலாளர்களை தேர்ந்தெடுத்தோம். ஏற்கெனவே கார்கள் வைத்துள்ளவர்களுக்கு வீடு வழங்க முடிவு செய்தோம். வீடு வேண்டாம் என்றவர்களுக்கு கார்கள் வழங்கினோம்’’ என்றார்.

‘‘தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 400 வீடுகளும் தலா 1,100 சதுர அடி கொண்டதாகும். ஹரே கிருஷ்ணா வைர ஏற்றுமதி நிறுவனத்தின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் இந்த வீடுகள் வெறும் ரூ.15 லட்சத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.

அதில் முதல் 5 ஆண்டு தவணை மாதம் ரூ.5 ஆயிரத்தை நிறுவனமே செலுத்தும். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மாதம் ரூ.11 ஆயிரம் செலுத்தினால் போதும்’’ என்று தோலக்யா கூறினார்.கடந்த ஆண்டு 491 கார்கள், 200 வீடுகளை தனது தொழிலாளர்களுக்கு தோலக்யா வழங்கினார். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கையை 2 மடங்காக்கி தொழிலாளர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளார்.-ஐஏஎன்எஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in