

தீவிரவாத தாக்குதல் அபாயம் இருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, 22 விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ் தான், குஜராத் ஆகிய எல்லை யோர மாநிலங்கள் மற்றும் டெல்லியைச் சேர்ந்த 22 விமான நிலையங்களில் கூடுதல் விழிப்புடன் பாதுகாப்பு அளிக்கும்படி அறிவுறுத் தப்பட்டுள்ளது. பயணிகள் விமானப் பாதுகாப்பு வாரியம் இதுதொடர் பாக விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் துணை ராணுவப் படையினருக்கும், மாநில காவல் துறைக்கும் விரிவான எச்சரிக் கைக் கடிதம் அனுப்பியுள்ளது.
மேலும், அரசு மற்றும் தனியார் விமான நிலையங்களுக்கும் தீவிரவாத தாக்குதல் அபாயம் குறித்த எச்சரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து பயணிகளின் பொருட்களை கூடுதல் கவனத்துடன் சோதனைக்கு உட்படுத்தப்படும். வாகன நிறுத்தங்கள், விமான நிலைய வாகனங்களால் பயன்படுத்தப்படும் சரக்கு ஏற்றுமிடங்கள் உள்ளிட்ட பகுதிகளும் மிகுந்த கவனத்துடன் கண்காணிக்கப்படும்.
திருவிழாக் காலத்தில் உச்சபட்ச பாதுகாப்பு எச்சரிக்கை வழக்கமான ஒன்றுதான். ஆனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் துல்லிய நடவடிக்கைக்குப் பிறகு, தீவிரவாத தாக்குதல் அதிகரித்திருப்பதால், உளவுத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாட்டு எல்லைக் கோடு பகுதியில் பாதுகாப்பு நிலவரம் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று முன்தினம் சந்தித்து விளக்கினார். எல்லை தாண்டி ஊடுருவ பாகிஸ்தான் எல்லையில் 100 தீவிரவாதிகள் தயாராக இருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.