Published : 29 Jul 2022 04:46 AM
Last Updated : 29 Jul 2022 04:46 AM
சென்னை: கேலோ இந்தியா திட்டத்தில், 300-க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்கள் ரூ.270 கோடி மதிப்பில் நடைபெறுகிறது என்று மத்திய விளையாட்டு துறை அமைச்சர் தெரிவித்தார்.
சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-வது சர்வதேச செஸ் போட்டி தொடக்கவிழாவில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் பேசியதாவது:
பெருமை வாய்ந்த நிகழ்வு
இந்த போட்டி, மிகவும் முக்கியமான தருணம். இது, வரலாற்று சிறப்புமிக்க பெருமை வாய்ந்த நிகழ்வாகும். செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒலிம்பியாட் ஜோதியை பிரதமர் மோடி கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த ஜோதி நாடு முழுவதும் திருப்பதி, திருவனந்தபுரம், புவனேஸ்வர் உட்பட 75 நகரங்களில் பயணித்து, 40 நாட்களை கடந்து தற்போது பிரதமரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
உலக நாடுகளில் இருந்து வந்துள்ள எல்லா வீரர்களையும் வரவேற்கிறோம். சர்வதேச விளையாட்டு போட்டிகளில் இந்தியா சிறப்பாக செயல்பட பிரதமர் மோடி மிகப்பெரிய ஆதரவு அளித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களில் கேலோ இந்தியா, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு, கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டில் 15 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளனர்.
கேலோ இந்தியா தடகளம் முக்கியமானதாக இருக்கிறது. இது, நாட்டுக்கு பெருமையை ஏற்படுத்திக் கொடுக்கிறது. கேலோ இந்தியா திட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்கள் ரூ.270 கோடியில் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
எல்.முருகன் புகழாரம்
விழாவில், மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் பேசியதாவது:
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி இதே இடத்தில் தமிழகத்துக்கான பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து 2 மாதத்தில் மிகப்பெரிய வரலாற்று சாதனையையும் செய்துள்ளார். அதாவது, நாம் 75-ம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
75 ஆண்டுகளாக நடக்காத ஒன்றான, திரவுபதி முர்முவை குடியரசு தலைவராக்கி வரலாற்று நாயகனாக மோடி திகழ்கிறார். 8 ஆண்டுகளாக எண்ணற்ற திட்டங்களை நமக்கு கொடுத்து கொண்டிருக்கும் மோடி, தமிழகத்தின் பாரம்பரியம், தமிழ் மொழியின் சிறப்பை உலகம் முழுவதும் எடுத்து சென்று சேர்த்துள்ளார்.
ஐநாவில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என முழக்கமிட்டார். சொந்த தொகுதியான வாரணாசியில் முண்டாசு கவிஞர் பாரதியாருக்கு இருக்கை அமைத்து தமிழகத்துக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார்.
‘வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழுங் குடி’ என்பதுபோல நரேந்திர மோடி சிறந்த ஆட்சியை இந்தியாவுக்கு கொடுத்துக் கொண் டிருக்கிறார். பிரதமர் மோடியும், தமிழக முதல்வர் ஸ்டாலினும் இணைந்து, இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் இந்த செஸ் போட்டியை நடத்தி கொண்டிருக்கின்றனர். அதுவும் சென்னையில் இந்த செஸ் போட்டி நடத்துவதில் நமக்கு மிகவும் பெருமை. விளையாட்டு துறையில் தமிழர்களுக்கு பல்வேறு பெருமைகளைச் சேர்த்தவர் பிரதமர் மோடி. இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT