Published : 29 Jul 2022 05:02 AM
Last Updated : 29 Jul 2022 05:02 AM
கொல்கத்தா: மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் கல்வி அமைச்சராகவும், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் இருந்தவர் பார்த்தா சட்டர்ஜி. இவர் கல்வி அமைச்சராக இருந்தபோது ஆசிரியர், ஊழியர் நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, கொல்கத்தாவில் பல இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் 22-ம் தேதி சோதனை நடத்தினர்.
இதில் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜிக்கு நெருக்கமான நடிகை அர்பிதாவின் வீட்டில் ரூ.21 கோடி ரொக்கம் நகைகள், ரூ.2 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து இருவரும் கடந்த 23-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இவர்களை 10 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கொல்கத்தா நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
நடிகை அர்பிதாவின் வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியில் முக்கிய குறிப்புகள் இருந்தன. அதனடிப்படையில் கொல்கத்தாவின் பெல்காரியா பகுதியில் உள்ள அர்பிதாவின் மற்றொரு வீட்டில் அமலாக்கத்துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். சுமார் 18 மணி நேரம் நடந்த சோதனையில் ரூ.29 கோடி ரொக்கம், ரூ.5 கிலோ தங்க நகையும் கைப்பற்றப்பட்டன. இவற்றை 10 பெட்டிகளில் அமலாக்கத்துறையினர் எடுத்துச் சென்றனர்.
இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் நடிகை அர்பிதாவின் வீடுகளில் இருந்து ரூ.50 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவையனைத்தும் பார்த்தா சட்டர்ஜி கல்வி அமைச்சராக இருந்தபோது, அரசுப் பள்ளி ஆசிரியர் மற்றும் ஊழியர் நியமனம், பணியிட மாற்றம், கல்லூரிகளுக்கான அங்கீகாரம் வழங்கியதில் பெற்ற லஞ்சப் பணம் என அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் நடிகை அர்பிதா கூறியதாக தெரிகிறது. இது தொடர்பாக மேற்குவங்க பள்ளிக் கல்வி வாரியத்தின் முன்னாள் தலைவராக இருந்த திரிணமூல் எம்எல்ஏ மாணிக் பட்டாச்சார்யாவிடமும் அமலாக்கத்துறையினர் நேற்று விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று அமைச்சரவை கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். அதன்பின் அமைச்சரவையில் இருந்து பார்த்தா சட்டர்ஜி நீக்கப்பட்டார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘‘ஊழலை நான் ஆதரிக்கவில்லை. கைது செய்யப்பட்ட அமைச்சர் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டால் அவர் தண்டிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், இந்த விவகாரத்தில் எனக்கு எதிரான பிரச்சாரத்தையும் கண்டிக்கிறேன்’’ என்றார்.
பார்த்தா சட்டர்ஜி வீட்டில் திருட்டு
மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பார்த்தா சட்டர்ஜியின் வீடு உள்ளது. பூட்டிய நிலையில் இருந்த வீட்டில் நேற்று முன்தினம் இரவு திருட்டு சம்பவம் நடந்தது. ஒருவர் பூட்டை உடைத்து அமைச்சர் வீட்டில் இருந்த பொருட்களை பெரிய பைகளில் கட்டி எடுத்துச் சென்றார். இதை பார்த்த உள்ளூர் மக்கள் அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடப்பதாக நினைத்துள்ளனர். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
3,4-வது வீட்டிலும் சோதனை
நடிகை அர்பிதாவின் 2 வீடுகளில் மொத்தம் ரூ.50 கோடி ரொக்கம் மீட்கப்பட்டுள்ள நிலையில், அர்பிதாவின் 3, 4-வது வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
பார்த்தா சட்டர்ஜியின் ஊழல் அம்பலமாகியுள்ள நிலையில், அவர் மேற்குவங்க அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் பார்த்தா சட்டர்ஜி இருந்தார். இவரால் திரிணமூல் கட்சியின் கவுரவம் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் பார்த்தா சட்டர்ஜியை முதல்வர் மம்தா பானர்ஜி நீக்கினார்.
தீவிர கண்காணிப்பு
பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மற்ற தலைவர்கள், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனரா என மத்திய விசாரணை அமைப்புகள் கண்காணிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT