Published : 29 Jul 2022 05:14 AM
Last Updated : 29 Jul 2022 05:14 AM

குடியரசுத் தலைவர் குறித்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சர்ச்சை கருத்து - நாடாளுமன்றத்தில் பாஜக - காங்கிரஸ் மோதல்

ஸ்மிருதி இரானி

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறித்து காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறிய சர்ச்சை கருத்தால் நாடாளுமன்றத்தில் பாஜக, காங்கிரஸ் எம்பிக்களுக்கு இடையே நேற்று கடுமையான மோதல் ஏற்பட்டது.

மேற்குவங்கத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி டெல்லியில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறித்து அவர் சர்சைக்குரிய வகையில் பேசினார். இந்த வீடியோ நாடு முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று கூடியதும், ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் சர்ச்சை கருத்துக்கு பாஜக எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது, "குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டது முதல் காங்கிரஸ் கட்சி வெறுப்பை உமிழ்ந்து வருகிறது. காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, நாட்டின் மிகஉயர்ந்த பதவியில் இருக்கும் முர்முவை அவதூறாகப் பேசியுள்ளார். வாய்தவறி பேசிவிட்டதாக அவர் மழுப்புகிறார். ஆனால் அவர் வேண்டுமென்றே அநாகரிகமாக பேசியிருக்கிறார். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் அனைவரும் இதே கோரிக்கையை வலியுறுத்தி குரல் எழுப்பினர். இதன்காரணமாக மாநிலங்களவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியபோதும் பாஜக எம்.பி.க்கள் பிரச்சினை எழுப்பினர். இதனால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட் டது. இதன் பிறகு நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவையிலும் இதே விவகாரம் எழுப்பப்பட்டது. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசும்போது, "காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குடியரசுத் தலைவரை மிக மோசமாக பேசியுள்ளார். இந்த விவகாரத்தில் காங்கிரஸும் அந்த கட்சியின் தலைவர் சோனியா காந்தியும் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும். பழங்குடியின பெண், குடியரசுத் தலைவராக பதவியேற்றதை காங்கிரஸால் சகித்து கொள்ள முடியவில்லை" என்று தெரிவித்தார்.

மக்களவையில் பாஜக கூட்டணிஎம்.பி.க்கள், காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷமிட்டு கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கி வரும் நிலையில் ஆளும் பாஜக எம்.பி.க்கள் எழுப்பிய உரிமை குரலால் நேற்று இரு அவைகளும் முடங்கின.

மகளிர் ஆணையம் நோட்டீஸ்

காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பான விசாரணை ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலையிட்டு, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

சோனியா - ஸ்மிருதி இரானி வாக்குவாதம்

மக்களவையில் இருந்து சோனியா புறப்பட்டபோது சோனியா மன்னிப்பு கோர வேண்டும் என்று பாஜக எம்.பி.க்கள் கோஷமிட்டனர். இதனால் கோபமடைந்த சோனியா, பாஜக எம்.பி. ரமா தேவியிடம் சென்று "வாய் தவறி பேசிவிட்டதாக ஆதிர் ரஞ்சன் மன்னிப்பு கோரியுள்ளார். இந்த விவகாரத்தில் என் பெயரை இழுப்பது ஏன்" என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது ஸ்மிருதி இரானி, "நான் தான் உங்கள் பெயரை குறிப்பிட்டு பேசினேன். எதுவாக இருந்தாலும் என்னோடு பேசுங்கள்" என்றார். இதற்கு சோனியா, "என்னிடம், நீங்கள் பேச வேண்டிய அவசியமில்லை. என் பெயரைக்கூட நீங்கள் உச்சரிக்கக் கூடாது" என்று ஆவேசமாக கூறினார். ஸ்மிருதி கூறும்போது, "நான் ஏன் மவுனமாக இருக்க வேண்டும். உங்கள் பெயரை சொல்லக் கூடாது என்று எப்படி கூற முடியும்" என்று கேட்டார். பின்னர் இருவரையும் அமைச்சர் பிரகலாத் ஜோஷி, தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே உள்ளிட்டோர் தலையிட்டு சமாதானம் செய்தனர்.

மோசடிகாரர்களிடம் மன்னிப்பு கோர மாட்டேன்: ஆதிர் ரஞ்சன்

ஆதிர் ரஞ்சன் கூறும்போது, ‘‘நான் மேற்குவங்கத்தை சேர்ந்தவன். எனது தாய் மொழி வங்க மொழி. இந்தியில் எனக்கு புலமை கிடையாது. இந்தியில் வாய் தவறி பேசிவிட்டேன். குடியரசுத் தலைவர் மனம் புண்பட்டிருந்தால் அவரிடம் நேரடியாக மன்னிப்பு கோருவேன். மோசடிகாரர்களிடம் மன்னிப்பு கோர மாட்டேன். இந்த மோசடிகாரர்கள் சோனியா குறித்தும், சசிதரூரின் மனைவி குறித்தும் பேசியதை யாரும் மறக்க முடியாது’’ என்றார்.

ஆனால், சீக்கியர் கலவரம் குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், "ஒரு பெரிய மரம் விழும்போது, பூமி அதிர்வது இயல்பானது" என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். மேலும் பிரதமர் மோடி குஜராத்தில் இருந்து டெல்லிக்கு வந்த அகதி என்றும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கங்கையை போன்றவர், பிரதமர் நரேந்திர மோடி சாக்கடையை போன்றவர் என்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x