Published : 29 Jul 2022 05:24 AM
Last Updated : 29 Jul 2022 05:24 AM
அகமதாபாத்: குஜராத்தின் சபர் பால் பண்ணையில் ரூ.1,000 கோடி மதிப்பிலான 3 திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
குஜராத்தின் சபர்கந்தா மாவட்டம், கதோடா சவுக்கி என்ற இடத்தில் சபர் பால் பண்ணை உள்ளது. இங்கு ரூ.1,000 கோடி மதிப்பிலான 3 திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதில் நாளொன்றுக்கு 120 டன் உற்பத்தி திறன் கொண்ட பால் பவுடர் ஆலை மற்றும் நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டர் பதப்படுத்திய பாலை பாக்கெட்டில் அடைக்கும் ஆலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும் ரூ.600 கோடி செலவிலான பால் பொருட்கள் உற்பத்தி ஆலைக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: சபர் பால் பண்ணை தற்போது விரிவடைந்துள்ளது. நூற்றுக்கணக்கான கோடி புதிய திட்டங்களுக்கான பணிகள் இங்கு நடைபெற்று வருகின்றன. இந்தப்பகுதி மற்றும் இங்குள்ள மக்களுடன் எனக்கு நீண்டகாலத் தொடர்பு உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் குஜராத்தில் பால் பொருள் சந்தை ரூ.1 லட்சம் கோடியை எட்டியுள்ளது. 2007 மற்றும் 20011-ல் நான் இங்கு வந்தபோது பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன். தற்போது பெரும்பாலான குழுக்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது. விவசாயிகளுக்கு மாற்று வருமான வழிகளை உருவாக்கும் உத்தி பலனளிக்கிறது. தோட்டக் கலை, மீன் வளம், தேன் உற்பத்தி ஆகியவை விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தை அளிக்கிறது. காதி மற்றும் கிராமப்புற பொருட்களின் விற்றுமுதல் முதன்முறையாக ரூ.1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. கிராமங்களில் இந்த துறைகளில் 1.5 கோடிக்கும் அதிகமான புதிய வேலைவாய்ப்புகள் உரு வாக்கப்பட்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் 3 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டைகளை நமது அரசு வழங்கியுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT