

மும்பையில் உள்ள அரசு கப்பல் கட்டுமான நிறுவனத்தில் பேரரசர் ராஜேந்திர சோழனின் உருவப் படம் நேற்று திறந்து வைக்கப் பட்டது.
ராஜேந்திர சோழன் புத்தாயிரம் கொண்டாட்ட குழுவின் சார்பில் மத்திய அரசு உதவியுடன் மும்பையில் உள்ள மஸாகான் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் ராஜேந்திர சோழனின் உருவப் படத்தை திறக்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் ராஜேந்திர சோழனின் உருவப் படத்தை மகாராஷ்டிரா ஆளுநர் வித்யா சாகர் ராவ், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் திறந்துவைத்தனர்.
பின்னர் பேசிய ஆளுநர் வித்யாசாகர் ராவ், ‘ராஜேந்திர சோழனின் சிறப்புகள், வெற்றிகள் குறித்து எடுத்துக் கூறினார். முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேசியபோது, 1000 ஆண்டுகளுக்கு முன்னரே கடல்வழி பாதுகாப்பு குறித்து ராஜேந்திர சோழன் அறிந்திருந்து, நமக்கு முன்னுதாரணமாக செயல்பட்டுள்ளார்’ என்று குறிப் பிட்டார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை பாஜக மூத்த தலைவரும், ராஜேந்திர சோழன் விழா கொண்டாட்ட குழுவின் தலைவருமான தருண் விஜய் செய்திருந்தார்.
மும்பையில் உள்ள அரசு கப்பல் கட்டுமான நிறுவனத்தில் ராஜேந்திர சோழனின் உருவப் படத்தை திறந்துவைத்த மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், உடன் தருண் விஜய் உள்ளிட்டோர்.