Published : 28 Jul 2022 06:12 AM
Last Updated : 28 Jul 2022 06:12 AM

புற்றுநோயை எதிர்த்து போராடும் மாணவி 12-ம் வகுப்பில் 98% மதிப்பெண் பெற்று சாதனை

லக்னோ: புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதை எதிர்த்து போராடும் மாணவி 12-ம் வகுப்பில் 98% மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவைச் சேர்ந்தவர் பிரமிதா திவாரி (17). கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு (சிஐஎஸ்சி) படித்து வந்த இவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் ரத்த மற்றும் எலும்பு மஜ்ஜை புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் குருகிராமில் உள்ள பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சை பெற்றுக் கொண்டே, முதல் மற்றும் 2-ம் பருவ தேர்வுகளை எழுதினார். பிரமிதா குருகிராமில் உள்ள ஒரு மையத்தில் தேர்வெழுத அவரது பள்ளி முதல்வர் சிஐஎஸ்சி-யிடம் அனுமதி பெற்றிருந்தார். இறுதியில் பிரமிதா 97.75 சதவீத மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மருத்துவராக ஆசை

இதுகுறித்து பிரமிதா கூறும் போது, “எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அடிக்கடி மருத்துவமனைக்கு செல்ல வேண்டி இருந்தது. இதனால் தேர்வுக்காக திட்டமிட்டு படிக்க முடியவில்லை. எனினும், கிடைத்த நேரத்தில் முழு கவனம் செலுத்தி படித்தேன். மருத்துவர் ஆக வேண்டும் என்பதுதான் என் னுடைய குறிக்கோள்” என்றார்.

மஜ்ஜை மாற்று சிகிச்சை

கடந்த ஜனவரி மாதம் பிரமிதாவுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து, நோய் இப்போது கட்டுக்குள் உள்ளது. எனினும், முழுமையாக குணமடைய 5ஆண்டுகள் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x