Published : 28 Jul 2022 06:06 AM
Last Updated : 28 Jul 2022 06:06 AM
கொல்கத்தா: நடிகரும் பாஜக மூத்த தலைவருமான மிதுன் சக்கரவர்த்தி நேற்று கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 38 எம்எல்ஏக்கள் தற்போது பாஜகவுடன் தொடர்பில் உள்ளனர். இவர்களில் 21 பேர் என்னுடன் நேரடித் தொடர்பில் உள்ளனர். மகாராஷ்டிராவில் ஏற்பட்டது போன்ற சூழல் மேற்கு வங்கத்தில் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். ஏன் நாளையே கூட ஏற்படலாம். நாட்டில் 18 மாநிலங்களில் பாஜக ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. இன்னும் சில மாநிலங்களில் பாஜகவின் கொடி வெகு விரைவில் பறக்கும்.
இவ்வாறு மிதுன் சக்கரவர்த்தி கூறினார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்களின் கிளர்ச்சியால் சென்ற மாதம் கவிழ்ந்தது. இதையடுத்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஏக்நாத் ஷிண்டே அணி ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில் மிதுன் சக்கரவர்த்தி இவ்வாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து திரிணமூல் எம்பி. சாந்தனு சென் கூறும்போது, “மிதுன் சக்கரவர்த்தி பொய் தகவலை கூறி மக்களை முட்டாளாக்க முயற்சிக்கிறார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அறிந்தேன். இது உடல் நோய் அல்ல. மனநோய் என்று நினைக்கிறேன். அவர் சொல்வதை மாநிலத்தில் யாரும் நம்ப மாட்டார்கள்” என்றார்.
294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவையில் திரிணமூல் காங்கிரஸுக்கு 216 எம்எல்ஏக்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான பாஜகவில் 75 எம்எல்ஏக்களில் 5 பேர் பதவியை ராஜினாமா செய்யாமல் திரிணமூல் காங்கிரஸில் இணைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT