கர்நாடகா | பாஜக மாவட்ட செயலாளர் உயிரிழப்பு - அரசின் ஆண்டு கொண்டாட்டத்தை ரத்து செய்தார் பசவராஜ் பொம்மை

கர்நாடகா | பாஜக மாவட்ட செயலாளர் உயிரிழப்பு - அரசின் ஆண்டு கொண்டாட்டத்தை ரத்து செய்தார் பசவராஜ் பொம்மை
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடக மாநிலம் தக்ஷின கன்னடா மாவட்டத்தில் பாஜக இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் பிரவீன் நெட்டூரு மர்ம நபர்களால் அடித்துக்கொல்லப்பட்டார். இதனால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம் தக்ஷின கன்னடா மாவட்டம் சுள்ளியா அருகேயுள்ள பெல்லாரேவை சேர்ந்தவர் பிரவீன் நெட்டூரு (28). இவர் அந்த மாவட்டத்தின் பாஜக இளைஞர் அணி செயலாளராக இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் பிரவீன் பெல்லாரே கடைவீதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது 2 இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் ஆயுதங்களால் அவரை சரமாரியாக தாக்கினர்.

இதனால் பல‌த்த காயம் அடைந்த பிரவீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை, கர்நாடக பாஜக தலைவர் நளின்குமார் கட்டீல் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெல்லாரே போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரவீன் கொலையை கண்டித்து தக்ஷின கன்னட மாவட்டத்தில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த கர்நாடக பாஜக தலைவர் நளின்குமார் கட்டீலின் காரை வழிமறித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். புத்தூர், சுள்ளியா, கடப்பா உள்ளிட்ட இடங்களில் கடைகளை அடைத்து முழுஅடைப்பு போராட்டம் நடத்தினர். தக்ஷின கன்னட மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் புத்தூர், சுள்ளியா, கடப்பா உள்ளிட்ட தாலுகாக்க‌ளில் வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சுள்ளியாவில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீஸார், ‘‘பிரவீன் நெட்டூரு கொலை தொடர்பாக 10 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தனர். இதனால் பாஜகவினர் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர்.

இதனிடையே, பசவராஜ் பொம்மை கர்நாடக முதல்வராக பொறுப்பேற்று இன்று ஓராண்டு முடிவடைந்தது. இதையடுத்து கர்நாடக அரசு ஓராண்டு விழா கொண்டாட திட்டமிடப்பட்டிருந்து. ஆனால், பாஜக இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் பிரவீன் நெட்டூரு உயிரிழப்பை அடுத்து இந்த கொண்டாட்டங்களை ரத்து செய்துள்ளார் முதல்வர் பசவராஜ் பொம்மை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in