ராணுவ துல்லிய தாக்குதல்: அட்டாரி-வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி ரத்து
பஞ்சாப் மாநிலம் அட்டாரி-வாகா எல்லையில் தினமும் நடைபெறும் கொடி இறக்கும் நிகழ்ச்சியை இந்தியா எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) நேற்று ரத்து செய்தது.
அமிர்தசரஸ் நகரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் அட்டாரி-வாகா என்ற இடத்தில் இந்திய, பாகிஸ்தான் கூட்டு சோதனைச்சாவடி அமைந் துள்ளது. இங்கு முகாமிட்டுள்ள இரு நாடுகளின் எல்லை பாதுகாப்புப் படையினர் சார்பில் தினமும் மாலையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
சுமார் 30 நிமிடங்களுக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக இருநாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி ஏராளமான வெளிநாட்டினரும் அங்கு செல்வது வழக்கம். இந்நிலையில், எல்லையை ஒட்டி உள்ள பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து, கொடி இறக்கும் நிகழ்ச்சியை எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) அதிகாரிகள் ரத்து செய்தனர். இதனால், அட்டாரி-வாகா எல்லையை நோக்கி செல்ல வேண்டாம் என சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் பிஎஸ்எப் சார்பில் நேற்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
