Published : 27 Jul 2022 05:38 AM
Last Updated : 27 Jul 2022 05:38 AM

நாடு முழுவதும் கார்கில் போர் வெற்றி தின கொண்டாட்டம் - ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை

கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி டெல்லியிலுள்ள தேசிய போர் நினைவிடத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, விமானப் படை தளபதி வி.ஆர்.சவுத்ரி, கடற்படை தளபதி ஹரிகுமார் ஆகியோர் நேற்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.படம்: பிடிஐ

புதுடெல்லி: நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கார்கில் போர் வெற்றி தின விழா கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன. போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

கடந்த 1999-ல் காஷ்மீரின் கார்கில் பகுதிக்குள் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஊருடுவிய நிலையில், இந்திய ராணுவனத்தினருக்கும் பாகிஸ்தான் படையினருக்கும் மே 3-ம் தேதி தொடங்கி 3 மாதங்களாக போர் நடைபெற்றது. ‘ஆபரேஷன் விஜய்’ என்ற பெயரில் நடைபெற்ற இந்த போரில் பாகிஸ்தான் கைப்பற்றிய கார்கில் பகுதிகளை கைப்பற்றி, இந்தியா வெற்றி பெற்றது.

அதன்படி, இந்தியா வெற்றி பெற்ற நாளான ஜூலை 26 ‘கார்கில் விஜய் திவஸ்’ (கார்கில் வெற்றி தினம்) என கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளில் இந்திய தரப்பில் உயிரிழந்த நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.

இந்நிலையில், நேற்று நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கார்கில் வெற்றி தின விழா நடைபெற்றது.

டெல்லியில் நேற்று கார்கில் வெற்றி தின விழாவை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அஞ்சலி செலுத்தினார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் குடியரசுத் தலைவர் முர்மு கூறும்போது, “இந்த நாள் அசாதாரண வீரத்தின் சின்னம். கார்கில் விஜய் திவஸ் நமது ஆயுதப் படைகளின் அசாதாரண வீரம் மற்றும் உறுதிப்பாட்டின் சின்னமாகும்.

அன்னையைக் காக்க தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்த அனைத்து துணிச்சலான வீரர்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். அனைத்து நாட்டு மக்களும் அவர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் எப்போது கடமைப்பட்டிருப்பார்கள். ஜெய் ஹிந்த்!” என்று பதிவிட்டுள்ளார்.

வீடியோ வெளியீடு

இதையொட்டி, போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். மேலும் கார்கில் போர் வெற்றி தொடர்பான ஒரு வீடியோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நம்முடைய கார்கில் வெற்றி நாள், இந்த நாளில் நமது படை வீரர்களின் துணிச்சலையும், விடாமுயற்ச்சி, மன உறுதியையும் கடந்த 1999-ம் ஆண்டில் துரிதமாக செயல்பட்டு நமது நாட்டை பாதுகாத்ததை நினைவுகூற வேண்டும். நமது ராணுவ வீரர்களின் வீரம் தலைமுறைகளை ஊக்குவிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து போர் வீரர்கள் நினைவிடத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த மத்திய அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அவர்களைத் தொடர்ந்து ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே, விமானப்படை தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி மற்றும் கடற்படை தளபதி ஹரி குமார் ஆகிய முப்படை தளபதிகளும் போர் வீரர்கள் நினைவிடத்தில மலர்வளையங்கள் வைத்து மரியாதை செலுத்தினர்.

திராஸ் பகுதி

கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக் யூனியன் பிரதேசத்தின் திராஸ், ஜம்மு உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள போர் நினைவுச் சின்னங்களில் ராணுவ தளபதிகள் ராணுவ மரியாதையுடன் வீரவணக்கத்தைச் செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x