

புவி வெப்பமயமாதலை கட்டுப் படுத்துவதற்கான பாரிஸ் பருவ நிலை மாற்ற ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் வழங்க மத்திய அமைச்சரவை நேற்று சம்மதம் தெரிவித்தது.
மகாத்மா காந்தி பிறந்த தினமான வரும் அக்டோபர் 2-ம் தேதி பாரிஸ் ஒப்பந்தத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார்.
இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வரலாற்று சிறப்பு மிக்க பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந் தத்துக்கு ப்புதல் வழங்க மத்திய அமைச்சரவை சம்மதம் தெரிவித் துள்ளது. இதன்மூலம் சர்வதேச அளவில் இந்த ஒப்பந்தத்தை நடை முறைப்படுத்துவதற்கு முக்கிய காரணமாக உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் இருக்கும்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது மற்றும் பருவநிலை நீதியை நிலைநாட்டுவது என்ற சர்வதேச நோக்கத்தில் இந்தியா உறுதியுடன் இருப்பதை உணர்த்துவதாக இந்த செயல் அமையும்.
இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வர வேண்டுமானால், 55 சதவீத பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்துக்குக் காரணமான நாடுகள் ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த வேண்டும். இதுவரை 61 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. இந்தியாவும் ஒப்புதல் அளித்தால், 51.89 சதவீத பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்துக்கு காரணமான நாடுகளின் ஒப்புதல் கிடைத்துவிடும். இதன்மூலம் விரைவில் இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு இறுதியில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் பருவநிலை மாற்ற உச்சி மாநாடு நடந்தது. அதில், பசுமை குடில் வாயு வெளியேறுவதால் 2 சதவீதத்துக்கு மேல் வெப்பநிலை உயர்வதை குறைப்பதற்கு ஏதுவாக பருவநிலை மாற்ற ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.
சர்வதேச அளவில் சுமார் 40 சதவீத பசுமை குடில் வாயு வெளியேற்றத்துக்குக் காரணமாக உள்ள அமெரிக்காவும் சீனாவும், பாரிஸ் ஒப்பந்தத்தை ஏற்கெனவே கூட்டாக உறுதிப்படுத்தி உள்ளன. எனவே, இந்த ஆண்டு இறுதியில் இது செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.