Published : 11 Jun 2014 10:00 AM
Last Updated : 11 Jun 2014 10:00 AM

காங்கிரஸ் ஆட்சித் திட்டங்களையே மீண்டும் கூறியுள்ளார் பிரதமர் மோடி: குடியரசுத் தலைவர் உரை குறித்து காங்கிரஸ் கருத்து

குடியரசுத் தலைவர் உரையில் புதிதாக எதுவும் சொல்லப் படவில்லை. ஏற்கெனவே எங்களின் (காங்கிரஸ்) ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களைத்தான், பிரதமர் மோடி மீண்டும் புதிய வடிவத்தில் தெரிவித்துள்ளார் என்று மக்களவைக்கான காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பான விவாதத்தின்போது, மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மேலும் பேசியதாவது: “நீங்கள் (பாஜக) பிரச்சாரம் செய்வதில் வல்லவர்களாக இருக்கிறீர்கள். சந்தைப்படுத்தும் முறை குறித்து உங்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், அதன் வழியாக மட்டுமே நாட்டை நிர்வகிக்க முடியாது.

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலம் பெற்று விட்டோம் என்ற செருக்குடன் செயல்படாதீர்கள். வெறும் அறிவிப்புகளை மட்டுமே வெளியிடுவதில் பயன் ஏதும் இல்லை. வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

இத்தேர்தலில் மொத்தம் 31.32 சதவீத வாக்குகளைத்தான் நீங்கள் (பாஜக) பெற்றுள்ளீர்கள். மீதமுள்ள 69 சதவீத வாக்காளர்களும் உங்களின் சித்தாந்தத்திற்கு எதிரானவர்களாக உள்ளனர்.

வளர்ச்சித் திட்டங்களில் மக்களை தவறாக வழிநடத்தினால், அவர்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள். சட்டம் – ஒழுங்குப் பிரச்சினையை மத்திய அரசு எவ்வாறு கையாளப்போகிறது என்பதை அதன் எதிர்கால நடவடிக்கைகளை வைத்துத்தான் அறிய முடியும்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள எம்.பி.க்களை வரவேற்கிறேன். பெண் ஒருவரை அவைத் தலைவராக தேர்ந்தெடுத்த பாஜகவிற்கு பாராட்டு தெரிவிக்கிறேன். மக்களவையில் நாங்கள் குறைந்த எம்.பி.க்களைக் கொண்டிருந்தாலும், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துமாறு மத்திய அரசுக்கு அழுத்தம் தருவோம். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, தொடர்ந்து தாங்கள்தான் பதவியில் இருப்போம் என கருதக்கூடாது. வரும் காலத்தில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

பாஜக ஆளும் ராஜஸ்தானில் அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக தொழிலாளர் நலச் சட்டங்களில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அக்கட்சி பணக்காரர்களுக்கு ஆதரவாகவும், ஏழைகளுக்கு எதிராகவும் செயல்படுவதையே இது காட்டுகிறது” என்றார்.

இதற்கு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. அர்ஜுன் மேக்வால் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். மல்லிகார்ஜுன கார்கேயின் இப்பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மல்லிகார்ஜுன கார்கே தனது உரையை முடித்துக் கொண்டபோது, அவரது இருக் கைக்கு வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் ஆகியோர், அவர் சிறப்பாக பேசியதாக பாராட்டு தெரிவத்தனர். மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்கும் பாராட்டுத் தெரிவித்தார்.

பாண்டவர்களை கவுரவர்களால் வீழ்த்த முடியவில்லை

பாஜகவைச் சேர்ந்த ராஜீவ் பிரதாப் ரூடி, மக்களவையில் பேசும்போது, “பாஜகவிற்கு பெரும்பான்மை பலம் உள்ளது. 65 ஆண்டுகளாக தவறான ஆட்சி நடத்தி, இப்போது எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ் உள்ளது. உங்களது ஆலோசனையும், அதைப் போலவே (மோசமாக) இருந்தால் நாங்கள் ஏற்கமாட்டோம்” என்றார்.

அதற்கு பதிலடி தரும்விதமாக மக்களவையின் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது: “பாஜகவைச் சேர்ந்த ராஜீவ் பிரதாப் ரூடியின் பேச்சு, அரசியல் மேடைகளில் முன்வைக்கப்படும் முழக்கங்களைப் போல இருந்தது. அவர் வளர்ச்சித் திட்டங்கள் பற்றி பேசுவதில் அக்கறை காட்டவேண்டும்.

எங்களுக்கு மக்களவையில் 44 உறுப்பினர்கள்தான் உள்ளனர். உங்களுக்கு 300 உறுப்பினர்கள் உள்ளனர். எனவே, எங்களை அடக்கி ஆளலாம் என்று நீங்கள் நினைக்கலாம். மகாபாரதத்தில் பாண்டவர்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில்தான் இருந்தார்கள். ஆனால், அவர்களை ஒருபோதும் நூறு பேர் கொண்ட கவுரவர்களால் அச்சுறுத்தவோ, தோற்கடிக்கவோ முடியவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x