Published : 26 Jul 2022 06:36 AM
Last Updated : 26 Jul 2022 06:36 AM

3 முறை பாஜக அழைப்பை புறக்கணித்த முதல்வர் நிதிஷ்: ஐஜத - பாஜக கூட்டணி நீடிக்குமா?

புதுடெல்லி: பிஹாரில் கடந்த 2020-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றது. இதில் பாஜக 77 இடங்களில் வென்ற போதிலும், வெறும் 45 இடங்களில் வென்ற ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், நிதிஷ் குமார் ஆர்ஜேடி தலைவர் லாலுவுடன் நெருக்கம் காட்டுவதாக தகவல் வெளியானது. மேலும் நிதிஷ் குமார் பாஜக இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

நிதிஷ் படம் தவிர்ப்பு

இதை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் பிஹார் சட்டப்பேரவையின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் நிறைவு விழா நடைபெற்றது. இதில், பேரவைத் தலைவர் விஜய் குமார் சின்ஹா அழைப்பின் பேரில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சி தொடர்பான மலரில் முதல்வர் நிதிஷ் குமார் படம் இடம்பெறவில்லை.

இந்நிலையில், நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரது வீடுகளிலும் தேசியக் கொடியை பறக்கவிடுவது குறித்து ஆலோசிப்பதற்காக, கடந்த 17-ம் தேதி பாஜக கூட்டணி ஆளும் மாநில முதல்வர்கள் கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்தார். இதில் நிதிஷ் குமார் பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் பாஜகவின் துணை முதல்வர் தர்கிஷ் பிரசாத்தை அனுப்பி வைத்தார்.

இதையடுத்து, கடந்த 22-ம் தேதி குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வுபெறும் ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளித்தார். இதில் பங்கேற்குமாறு பாஜக விடுத்த அழைப்பையும் நிதிஷ் குமார் நிராகரித்தார்.

இதற்கு அடுத்தபடியாக நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு நேற்று பதவியேற்றுக் கொண்டார். இவ்விழாவில் பங்கேற்குமாறு நிதிஷ் குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை. கடந்த 10 நாட்களில் அடுத்தடுத்து 3 நிகழ்ச்சிகளுக்கு பாஜக விடுத்த அழைப்பை நிதிஷ் குமார் புறக்கணித்துள்ளார். இதனால் கூட்டணியில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x