Published : 26 Jul 2022 06:05 AM
Last Updated : 26 Jul 2022 06:05 AM

சிவசேனா கட்சிக்கு உரிமை கோரும் விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே மனு

புதுடெல்லி: உண்மையான சிவசேனா கட்சி யார் என்று முடிவு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கடந்த மாதம் கவிழ்ந்தது. சிவசேனாவின் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பிரிந்து பாஜகவுடன் இணைந்து ஆட்சியை அமைத்துள்ளனர்.

இந்நிலையில், 12 சிவசேனா எம்.பி.க்கள் சேர்ந்து, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தனியாக மனு அளித்து, தங்களை தனியாகச் செயல்பட அங்கீகரிக்குமாறு கோரி உள்ளனர். மேலும் சிவசேனா கட்சிக்கு உரிமை கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு ஏக்நாத் ஷிண்டே தரப்பு கடிதம் எழுதியுள்ளது.

பதிலுக்கு தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்றும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி குழுவை சிவசேனாவாக அங்கீகரிக்கக் கூடாது என்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி, தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே அணியை சட்டப்பேரவை சபாநாயகர், மக்களவை சபாநாயகர் ஆகியோர் அங்கீகரித்துள்ளனர்.

இதையடுத்து உண்மையான சிவசேனா யார் என்பதை முடிவு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா தலைவரும், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே மனு தாக்கல் செய்துள்ளார்.

இதுதொடர்பான மனுவில் உத்தவ் கூறியுள்ளதாவது: அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் விவகாரத்தில் இதுவரை முடிவு எடுக்காததால் யார் உண்மையான சிவசேனா என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய முடியாது.

அதிருப்தி எம்எல்ஏக்களின் பதவி பறிப்பு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அம்மனு மீது முடிவு செய்யப்படும் வரை தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்க அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு அனுமதித்தால் அது நீதிமன்ற நடவடிக்கையில் தலையிடுவதாக அமைந்துவிடுவதோடு, நீதிமன்ற அவமதிப்பாகவும் மாறிவிடும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

இதனிடையே உத்தவ் தாக்கரேவுடன் இருந்த கட்சியின் மூத்த தலைவரான அர்ஜுன் கோட்கர் நேற்று, சிவசேனா அதிருப்தி குழுத் தலைவரும், மகாராஷ்டிரா முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே அணியில் இணைந்துள்ளார். இது உத்தவ் தாக்கரே தரப்பினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x