

புதுடெல்லி: நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு (64) பதவியேற்றார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, மூத்த அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் விழாவில் பங்கேற்றனர்.
நாட்டின் புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல், கடந்த 18-ம் தேதி நடைபெற்றது. இதில், பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரவுபதி முர்மு, 64 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட யஷ்வந்த் சின்ஹாவுக்கு 36 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழா, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று விமரிசையாக நடந்தது. முன்னதாக திரவுபதி முர்மு நேற்று காலை மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றார். அங்கிருந்து திரவுபதி முர்முவும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் பதவியேற்பு விழாவுக்கு புறப்பட்டனர்.
முன்னும் பின்னும் குதிரைப் படை வீரர்கள் கம்பீரமாக அணிவகுக்க, பாரம்பரிய முறைப்படி இருவரும் அழைத்துச் செல்லப்பட்டனர். நாடாளுமன்ற வாயிலில் அவர்களை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகியோர் வரவேற்றனர்.
அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்பு விழா தொடங்கியது. நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.பதவியேற்ற பிறகு மரபுப்படி ராம்நாத் கோவிந்தும், திரவுபதி முர்முவும் இருக்கைகளில் மாறி அமர்ந்தனர்.
அதன்பின், குடியரசுத் தலைவர் முர்மு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியாவின் மிக உயர்ந்த பதவிக்கு என்னை தேர்ந்தெடுத்ததற்காக எம்.பி.க்கள், எம்எல்ஏக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை நான் பெறுகிறேன். நாடு சுதந்திரம் அடைந்து 50-வது ஆண்டை கொண்டாடும்போது எனது அரசியல் வாழ்க்கை தொடங்கியது. இப்போது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் குடியரசுத் தலைவராக பதவியேற்றுள்ளேன். அடுத்த 25 ஆண்டுகளில் 100-வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். அதற்குள் நமது லட்சிய தொலைநோக்கு திட்டங்களை நனவாக்க முழுமூச்சுடன் பாடுபட வேண்டும்.
100-வது ஆண்டு சுதந்திர தின இலக்குகளை அடைய 2 பாதைகளில் பயணம் செய்ய வேண்டும். முதல் பாதை அனைவரும் கூட்டு முயற்சி செய்ய வேண்டும். 2-வது பாதை அனைவரும் தங்கள் கடமையை ஆற்ற வேண்டும். ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் கூட்டு முயற்சி, கடமை என்ற பாதையில் இருந்து தவறக்கூடாது.
பழங்குடியினத்தைச் சேர்ந்த எனக்கு தொடக்கக் கல்வியை நிறைவு செய்வதே பெரும் சவாலாக, கனவாக இருந்தது. எனினும், எத்தனையோ தடைகளை தாண்டி மனஉறுதியுடன் கல்லூரி வரை முன்னேறினேன்.
வார்டு கவுன்சிலராக இருந்து நாட்டின் குடியரசுத் தலைவராக உயரும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இதுதான் இந்திய ஜனநாயகத்தின் மகத்துவம். ஏழையாலும் மிகப்பெரிய கனவை நனவாக்க முடியும் என்பதற்கு நானே சாட்சி.என்னுடைய வெற்றி ஏழைகள், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்களின் வெற்றி ஆகும்.
நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் முதல் ராம்நாத் கோவிந்த் வரை பலர் இந்த பதவியை அலங்கரித்துள்ளனர். அவர்கள் வகித்தமிகப்பெரிய பொறுப்பை நாடு என்னிடம்ஒப்படைத்திருக்கிறது. அரசமைப்பின் வெளிச்சத்தில், எனது கடமைகளை மிகுந்த நேர்மையுடன் நிறைவேற்றுவேன்.
வேலு நாச்சியார்
ராணி லட்சுமி பாய், ராணி வேலு நாச்சியார், ராணி கெய்டின்லியு, ராணி சென்னம்மா போன்ற துணிச்சலான பெண்கள் தேசத்தை பாதுகாப்பதில் பெண் சக்தியை உலகுக்கு பறைசாற்றினர். பன்முகத் தன்மை நிறைந்த நமது நாட்டில் பல மொழிகள், மதங்கள், பிரிவுகள், உணவுப் பழக்கங்கள், வாழ்க்கை முறைகள் பின்பற்றப்படுகின்றன. எனினும் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உயரிய லட்சியத்துடன் நாடு முன்னேறிச் செல்கிறது. ஒவ்வொரு துறையிலும் இந்தியா அபார வளர்ச்சி அடைந்து வருகிறது.
கரோனா பெருந்தொற்றை திறம்பட எதிர்கொண்டதில் உலகுக்கே இந்தியா வழிகாட்டியாக விளங்குகிறது. சில நாட்களுக்கு முன்பு 200 கோடி டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைத்தோம். இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா தன்னை தற்காத்து, உலகத்துக்கும் உதவிக்கரம் நீட்டியது. ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நம்பிக்கையோடு பார்க்கிறது. ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது.
பெண்களுக்கு கூடுதல் அதிகாரம்
பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதற்காக கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன்காரணமாக, நாட்டின் வளர்ச்சியில் உத்வேகம் ஏற்பட்டிருக்கிறது. இந்திய பெண்கள் மேலும் அதிகாரம் பெற வேண்டும். இதன்மூலம் அவர்கள் நாட்டை கட்டிஎழுப்புவார்கள். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் உலக நாடுகளுக்கு இந்தியா வழிகாட்டியாக விளங்குகிறது.
சொந்த நலன்களைவிட பொது நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சுயசார்பு இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
குடியரசுத் தலைவரின் ஆங்கில உரையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வாசித்தார். இதைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அனைவரிடம் இருந்தும் பிரியாவிடை பெற்றார்.
விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி, மூத்த அமைச்சர்கள், எம்.பி.க்கள், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உட்பட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். குடியரசுத் தலைவராக பதவியேற்ற முர்முவுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், சோனியா காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
குதிரைப் படை அணிவகுக்க குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்ட திரவுபதி முர்மு, அங்குமுப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
வழியனுப்பு விழா
பின்னர், குடியரசுத் தலைவர் மாளிகையில் ராம்நாத் கோவிந்துக்கு வழியனுப்பு விழா நடந்தது. ராம்நாத் கோவிந்த் வாகனத்தில் சென்று அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அவருக்கு டெல்லி ஜன்பத் சாலையில் எண்12 முகவரியில் உள்ள மாளிகை ஒதுக்கப்பட்டிருக்கிறது. பாரம்பரியத்தின்படி ஓய்வுபெற்ற குடியரசுத் தலைவரை புதிய குடியரசுத் தலைவர் வீடு வரை சென்று வழியனுப்பி வைக்க வேண்டும். அதன்படி, ராம்நாத் கோவிந்தை, திரவுபதி முர்மு காரில் வீடு வரை சென்று வழியனுப்பி வைத்தார்.
சந்தாலி மொழியில் வணக்கம்
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஒடிசாவின் சந்தாலி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். அவர் தனது உரையை ‘ஜோஹர்’ என்று கூறி தொடங்கினார். சந்தாலி மொழியில் ‘ஜோஹர்’ என்றால் வணக்கம் என்று அர்த்தம். பதவியேற்பு விழாவில் முர்முவின் மகள் இத்தீ ஸ்ரீ குடும்பத்தினரும், ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் இருந்து 64 பேரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.