ராஜ்யசபா சீட், கவர்னர் பதவிக்கு 100 கோடி ரூபாய் - மோசடியில் ஈடுபட்ட நால்வரை கைது செய்த சிபிஐ

ராஜ்யசபா சீட், கவர்னர் பதவிக்கு 100 கோடி ரூபாய் - மோசடியில் ஈடுபட்ட நால்வரை கைது செய்த சிபிஐ
Updated on
1 min read

புதுடெல்லி: 100 கோடி ரூபாய்க்கு ராஜ்யசபா சீட் மற்றும் கவர்னர் பதவி வாங்கி தருவதாக மோசடி செய்ய இருந்த கும்பலை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ கைது செய்துள்ளது.

ராஜ்யசபா சீட், கவர்னர் பதவி போன்ற அரசாங்கத்தில் உயர் பதவிகளை பெற்றுவருவதாக கூறி, அவற்றுக்கு 100 கோடி ரூபாய் பெற முயன்ற நான்கு பேரை சிபிஐ அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. பணம் கைமாறுவதற்கு சற்று முன்பு நான்கு பேரை கைது செய்துள்ளனர். மகாராஷ்டிராவைச் சேர்ந்த கர்மலகர் பிரேம்குமார் பண்ட்கர், கர்நாடகாவைச் சேர்ந்த ரவீந்திர வித்தல் நாயக் மற்றும் டெல்லியைச் சேர்ந்த மகேந்திர பால் அரோரா மற்றும் அபிஷேக் பூரா ஆகியோர் கைது செய்யப்பட்டவர்கள்.

இவர்களில் மகாராஷ்டிராவின் லத்தூரில் வசிக்கும் கர்மலகர் பிரேம்குமார் பண்ட்கர் தன்னை சிபிஐ அதிகாரியாக மற்றவர்களிடம் அறிமுகம் செய்துகொண்டு அவர்களிடம் பழகி ஆசையை தூண்டி பதவி பெற்றுதருவதாக மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று சிபிஐ தெரிவித்துள்ளது. 15ம் தேதியே இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையையும் பதிவு செய்துள்ளது. மேலும் டெல்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட 7 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் வழக்கு தொடர்பான வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் பிற ஆதாரங்களையும் சிபிஐ மீட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள நால்வரும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் 100 கோடி ரூபாய்க்கு ராஜ்யசபா சீட் மற்றும் மத்திய அரசின் உயர் அமைப்புகளில் பதவிகளை பெற்றுதருவதாக மோசடி செய்துள்ளனர். சில நேரங்களில் 100 கோடி ரூபாய்க்கு கவர்னர் பதவியை பெற்றுதருவதாகவும், தங்களுக்கு அரசியல் பிரமுகர்கள் பலரைத் தெரியும் என்று பொய்யான உறுதிமொழி அளித்து மக்களை ஏமாற்றி வந்ததாக சிபிஐ குற்றம் சுமத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in