Published : 25 Jul 2022 07:40 AM
Last Updated : 25 Jul 2022 07:40 AM
புதுடெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் ஒருங் கிணைந்த பகுதிதான் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
கடந்த 1999-ல் பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் வெற்றிபெற்று 23 ஆண்டுகள் ஆகின்றன.இதன் வெற்றி தினம் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜம்முவில் நேற்று கார்கில் வெற்றி தின கொண்டாட்டத்தை தொடங்கி வைத்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் பேசியதாவது:
பாகிஸ்தானுடன் நடந்த கடைசி போர் 1999 கார்கில் போர் ஆகும். இந்தப் போர் முழு அளவிலானது அல்ல. ஆனால் ஒவ்வொரு போரிலும் நமது இந்திய வீரர்கள் தங்கள் இன்னுயிரை நாட்டுக்காக கொடுத்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதி முழுவதும் ஒரு ‘முக்கிய போர் அரங்கமாகவே' உள்ளது.
ஆனால் ராணுவ வீரர்களின் துணிச்சல் மற்றும் தைரியத்தால் அவர்களை முறியடித்தோம். பாகிஸ்தான் நமது அண்டை நாடு. நமது அண்டை நாட்டை நம்மால் மாற்ற முடியாது என்று முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஒருமுறை கூறியிருந்தார். நமது அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேண வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். ஆனால் அவர்கள் அப்படி நினைப்பதில்லை. 1990-களில் கார்கிலில் உள்ள திராஸ் பகுதியில் அத்துமீறி நுழைந்தனர். அதற்கு நாம் சரியான பதிலடி கொடுத்தோம். அதை யாராலும் மறக்க முடியாது.
பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ள காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான். இது இந்தியாவிடமே இருக்கும். இந்த விஷயத்தில் பாகிஸ்தானுக்கு போதிய ஞானம் கிடைக்க நான் கடவுளை வேண்டுகிறேன். நமது பலத்தை அண்டை நாடு நன்றாக அறிந்திருக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT